சென்னை; தமிழகத்தில் உர தட்டுப்பாடு எதுவும் இல்லை , உரத் தட்டுப்பாடு என்று சிலர் ஒரு மாயை உருவாக்குகிறார்கள் என தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி யூரியா 1,60, 937 மெட்ரிக் டன், டிஏபி- 40 ஆயிரத்து 356 மெட்ரிக் டன், பொட்டாசியம் 37,303 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1,36,283 மெட்ரிக் டன் இருப்பு இருக்கிறது என்றும் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தனர். குறிப்பாக திருவாரூ, சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை தெரிதவித்தனர். மேலும், சில தனியார் கடைகளில் உரம் அரசு அறிவித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் சில இடங்களில் தனியாா் கடைகளிலும் உரம் இல்லாத நிலை தொடா்கிறது. சில தனியாா் கடைகளில் ரூ 260-க்கு விற்க வேண்டிய ஒரு மூட்டை யூரியாவை, ரூ.350-க்கு விற்பனை செய்கின்றனா். இவ்வாறு அதிக விலை கொடுத்தாலும் தேவையான யூரியா மூட்டைகள் கிடைப்பதில்லை. மேலும் அதிக விலைக்கு விற்க கடைக்காரா்கள் யூரியாவை பதுக்கி வைக்கின்றனரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து, திமுக அரசை குறை கூறினர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் உழவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373 டன் பொட்டாஷ், 16,792 டன் டி.ஏ.பி, 22,866 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழகத்தில் உர தட்டுப்பாடு எதுவும் இல்லை , உரத் தட்டுப்பாடு என்று சிலர் ஒரு மாயை உருவாக்குகிறார்கள் என்று விமர்சித்ததுடன், இணை உரம் வாங்கினால் தான் யூரியா வழங்கப்படும் என்று கூறும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஏற்கனவே இணை உரம் வாங்கினால் தான் யூரியா கொடுக்கப்படும் எனக் கூறிய முகவர்களை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழைத்து இது போன்றகூறக்கூடாது என கண்டித்து அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தவர், இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளதாகவும், இதுபோன்று கூறுபவர்கள் மீது புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தற்போதைய நிலையில், அதாவது இன்றைய நிலவரப்படி யூரியா 1,60, 937 மெட்ரிக் டன், டிஏபி- 40 ஆயிரத்து 356 மெட்ரிக் டன், பொட்டாசியம் 37,303 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1,36,283 மெட்ரிக் டன் இருப்பு இருக்கிறது என்று கூறியதுடன், விவசாயிகளுக்கு இவ்வளவு உரங்கள் இருக்கிறது என்ற கணக்கு எங்களிடம் ஆதாரப்பூர்வமாக உள்ளது என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் தெரிவித்தார்.