வரலாற்றில் சில திருத்தங்கள்! இந்த தொடர் வெடிக்கும்: கிளியோபாட்ரா எனப்படும் கருப்பழகி

அத்தியாயம் -7                                                    இரா.மன்னர் மன்னன்

‘கிளியோபாட்ரா’ – இந்தப் பெயரைக் கேட்டவுடன் நம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும் இரண்டு விஷயங்கள்.

1.   கருப்பு அழகி.

2.   அழகுக்காக கழுதைப் பாலில் குளித்தவள்.

இது இரண்டைத் தவிர கிளியோபாட்ரா பற்றி நாம் அறிந்த செய்திகள் மிகச் சொற்பம். வில்லியம் சேக்ஸ்பியரின் வரிகளில் வர்ணிக்கப்பட்ட கிளியோபாட்ராதான் நாம் அதிகம் அறிந்த கிளியோ பாட்ரா. ஆனால் இவள் வரலாற்றில் வாழ்ந்த உண்மையான கிளியோபாட்ராவுக்கு பிற்கால சமூகம் அணிவித்த ஒரு முகமூடி மட்டுமே என்பதுதான் உண்மை. ஒரு நபரை விஷம் கொடுத்துதான் கொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெல்லம் கொடுத்தும் கொல்லலாம். கிளியோபாட்ராவின் உண்மையான புகழ் அவளது அறிவும் ஆளுமையுமே ஆகும். அவை ‘அழகு’ என்ற வெல்லத்தை அதிகம் திணித்துக் கொல்லப்பட்டன.

எகிப்தின் அரசியான கிளியோபாட்ரா எகிப்திய மரபைச் சேர்ந்தவள் கிடையாது. இவளது மரபைப் பற்றி அறிந்து கொள்ள நாம் சற்று பின்னோக்கி அலெக்சாண்டரின் காலத்திற்குச் செல்ல வேண்டும். உலகையே வெற்றி கொள்ளப் புறப்பட்ட கிரேக்கப் பேரரசரான அலெக்சாண்டர் மறைந்த பின்னர் அவரது தளபதி தாலமி ஒரு பேரரசராக எகிப்தில் ஆட்சி செய்யத் துவங்கினார். தாலமியின் வழியில் எகிப்தை ஆண்ட அவரது வாரிசுகள் இரண்டாம் தாலமி, மூன்றாம் தாலமி என்று தொடர்ச்சியாகத் தங்களுக்குப் பெயரிட்டுக் கொண்டனர். அரசிகளுக்கும் கிளியோபாட்ரா என்ற பெயர் அடுத்தடுத்து வைக்கப்பட்டது. அந்த மரபில் ஏழாவதாக வந்தவள்தான் நாம் அறிந்த கிளியோபாட்ரா.

தாலமி குடும்ப வாரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகள் எகிப்தை ஆண்டாலும், எப்போதும் தங்களை கிரேக்கர்களாகக் கருதுவதையே பெருமையாக எண்ணினர். கிரேக்க மரபில் வந்த பல தாலமி அரசர்களுக்கு தங்கள் மக்களின் மொழியான எகிப்திய மொழி தெரியாது. அதே சமயம் அவர்களின் ஆட்சி மொழியான கிரேக்கம் மக்களுக்குத் தெரியாது. இந்த நிலையில் 12ஆம் தாலமியின் மகளாக நாமறிந்த கிளியோபாட்ரா பிறந்தாள். இயல்பிலேயே மக்களைப் பற்றிய சிந்தனை கொண்ட அவள், மக்களின் குறைகளை அறிய அவர்களின் எகிப்திய மொழியை கற்றுக் கொண்டாள். எகிப்திய மொழி கற்ற முதல் கிரேக்கப் பேரரசி கிளியோபாட்ராதான். அதற்கு முன்னர் அரச மரபில் வந்த எந்தப் பெண்ணுக்கும் எகிப்திய மொழி தெரியாது. எகிப்திய மொழி தவிரவும் வேறு 10 மொழிகளி லும் கிளியோபாட்ராவுக்கு சரளமாகப் பேசத்தெரியும். அதனால்தான் உலக வரலாற்றில் அதிக பேச்சாற்றல் கொண்டவளாக கிளியோபாட்ரா போற்றப்படுகிறாள்.

எகிப்திய மக்களின் மீது கொண்ட நேசத்தினால் தன்னை,  மக்கள் நேசிக்கும் எகிப்திய தேவதை இசிஸ்ஸின் மறுபிறவி என்று கிளியோபாட்ரா அழைத்துக் கொண்டாள். இதனால் எகிப்திய மக்கள் அவளை ஒரு அரசி என்பதையும் தாண்டி ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.

தனது 14ஆவது வயதில் கிளியோபாட்ரா தன் தந்தை 12ஆம் தாலமியுடன் சேர்ந்து எகிப்தின் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டாள். அவளது 18ஆவது வயதில் தந்தை இறந்தார். எகிப்திய அரசியலமைப்பின் படி அரசி நிழலாகத்தான் ஆட்சி செய்ய முடியும். அரசன் இல்லாமல் அரசு இயங்காது. அதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது சகோதரன் 13ஆம் தாலமியை கிளியோபாட்ரா திருமணம் செய்து கொண்டாள் (புனிதம் மிக்க அரச ரத்தம் வெளியே போகக்கூடாது என்ற கருத்தில் இந்த வழக்கம் உருவானது. கிரேக்கர்கள் எகிப்தியர்களை மணம் முடிக்க விரும்பவில்லை. தனது குடும்பத்தின் உள்ளாகவே திருமணம் செய்து கொண்டார்கள். இந்த வழக்கத்தினால் கிரேக்க அரசர்கள் நோயாளிகளாகப் பிறந்தனர் என்பது வேறுகதை). இந்தத் திருமணம் மூலம் கிரேக்கத்தில் கிளியோபாட்ராவின் ஆட்சி தொடர்ந்தது.

பூகோள ரீதியில் எகிப்து ஒரு வளம் மிக்க நாடு. பாலைவனத்தின் நடுவே இருந்த ஒரு செல்வச் சுரங்கம். ஆனால் படைபலத்தில் எகிப்து ஒரு சிறிய நாடு. இதனால் எகிப்திற்கு கொள்ளையர்கள், படையெடுப்புகள் குறித்த அச்சங்கள் நிறையவே உண்டு.

அந்தக் காலத்தில் எகிப்தைப் போல அல்லாமல் ரோமானியப் பேரரசு வலிமை மிக்கதாக இருந்தது. ஜூலியஸ் சீசர் அதன் பேரரசராக இருந்தார். இந்நிலையில் தனது நாட்டின் நலனைக் கருதிய கிளியோபாட்ரா சீசரை மணம் புரிய முடிவு செய்தாள். தனது முதல் பார்வையிலேயே சீசரை வீழ்த்தியபோது கிளியோபாட்ராவின் வயது 21. சீசருக்கு 54.

இந்நிலையில் எகிப்தில் அரசன் 13ஆம் தாலமி மர்ம முறையில் திடீரென இறந்தான். கிளியோபாட்ராதான் அவனைக் கொலை செய்தாள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அவள் சீசரை இன்னும் நெருங்கினாள். அதன் பின்னர் சீசருக்கும் தனக்கும் பிறந்த மகனோடு ரோமுக்கும் அவள் குடிபெயர்ந்தாள்.

கிளியோபாட்ராவின் வரவு ரோமானியர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. சீசரின் சகாக்களும் அரசியல் அறிந்த கிளியோபாட்ராவை வெறுத்தனர். இது பின்னர் சீசர் கொல்லப்பட முக்கியத் திரை மறைவுக் காரணங்களில் ஒன்றானது. சீசர் கொல்லப்பட்ட பின்னர் ரோமானிய ஆட்சியை யார் பிடிப்பது என்ற போட்டி சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடையில் ஏற்பட்டது. இந்த சூழலில் தனக்கு ஆபத்து நேரலாம் என நினைத்த கிளியோபாட்ரா எகிப்திற்கே தப்பிச் சென்றாள்.

சீசருக்குப் பின் ரோமப் பேரரசில் சீசரின் தளபதி மார்க் ஆண்டனியின் கை ஓங்கியது. இப்போது கிளியோபாட்ராவின் பார்வை ஆண்டனி மீது திரும்பியது. ஆண்டனியை காதலில் வீழ்த்தி கிளியோபாட்ரா திருமணமும் செய்து கொண்டாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்தக் காலத்தில் கிளியோபாட்ரா தனது சக எகிப்திய அரச வாரிசுளான 2 சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் கொன்று, எகிப்தின் ஒரே அரச வாரிசாக தன்னை நிலைநாட்டிக் கொண்டாள்.

கிளியோபாட்ராவின் அரசியல் செல்வாக்கு பலரால் பலவிதமாக விமர்சிக்கப்பட்டது. ஆண்கள் நிரம்பிய அரச அவைகளில் அவளைப் பற்றிய கேலிகளே பிரதான விவாதமாயின. மக்களின் மனநிலையை அறிந்த சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசர் கிளியோபாட்ராவை சிறை பிடிக்க எகிப்தின் மீது போர் தொடுத்தார். படைகள் எகிப்தை நோக்கி வரும் வழியில் அகஸ்டஸை எதிர்த்துப் போரிட்ட மார்க் ஆண்டனி படுதோல்வியுற்றார். அதற்குப் பின்னும் வாழ விரும்பாமல் போர்க்களத்திலேயே தற்கொலையும் செய்து கொண்டார்.

அகஸ்டஸிடம் சிக்கி கைதியாக வாழ விரும்பாத அந்தப் பேரரசி மீண்டும் இன்னொரு ஆண் துணையையும் தேடிக் கொள்ளத் தயாராக இல்லாத காரணத்தினாலோ என்னவோ தற்கொலை செய்துகொண்டாள். கிளியோபாட்ராவின் வாழ்க்கை விஷப் பாம்பினால் முடிந்ததா, விஷத்தால் முடிந்ததா என்பது இன்னும் புதிராக உள்ளது. தனது 14 வயதில் இருந்து எகிப்திலும் பின்னர் ரோமிலும் தனது அறிவினால் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய கிளியோபாட்ரா இறக்கும் போது அவரது வயது 39.

ஏழாவது கிளியோபாட்ராவின் முழுமையான பெயர் ‘கிளியோபாட்ரா திய பிலோபேட்டர்’ இதன் அர்த்தம் தந்தையின் அன்பாக வாழ்ந்த பெண்கடவுள் என்பது. (thea – goddess; philopator – father’s love) தனது பெயரைப் போலவே கிளியோபாட்ராவும் ஆண்களின் அன்பாகவும் புகழாகவுமே கடைசிவரை வாழ்ந்தாள். பெண்களுக்கு அன்றைய சமூகத்தினால் மறுக்கப்பட்ட பெரிய அதிகாரங்கள் அனைத்தையும் அவர் ஆண்களை முன்னிறுத்தி தன்வசமாக்கினாள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கிளியோபாட்ரா மக்களால் நினைவுகூறப் பட்டதற்குக் காரணம் அவளது ஆளுமைகள்தான். அவள் அழகு குறித்த சிந்தனைகள் சமீப காலத்தில்தான் தோன்றின. காதல் கவிதைகளுக்குப் பெயர் போன வில்லியம் ஷேக்ஸ்பியர், கிளியோபாட்ராவின் வம்சத்தில் ஆப்ரிக்க ரத்தமும் உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு அவள் நிறத்தை ’டானி’ (tawny – அதாவது பழுப்பும் மஞ்சளும் கலந்தநிறம்) என்று வர்ணிக்க, பெரிய ஆளுமைகளைக் கொண்ட அவளைக் கருப்பழகி என்று கொண்டாடியே  அவள் புகழை விழுங்கியது ஆணாதிக்க நிழல்.

உண்மையில் கிளியோபாட்ரா என்ன நிறம் என்று இந்த உலகத்திற்கு இன்னும் தெரியாது, இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், எந்த ஆய்வுகளும் இது தொடர்பான உறுதியான முடிவைக் கொடுக்கவில்லை. ஆனால் எல்லா ஆய்வுகளும் கிளியோபாட்ராவின் ஆளுமையை மட்டும் உறுதி செய்கின்றன.

இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பல்லாயிரம் அழகிகளை உலக வரலாறு பார்த்திருக்கின்றது. ஆனால் கிளியோபாட்ரா போன்ற வலிமையான அரசிகள் வெகுசிலரே!.

இந்த சமூகம் கிளியோபாட்ராவிடம் கவனிக்க வேண்டியது அழகையா? திறனையா?

(தொடரும்)