ஓ.பி.எஸ்.

மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் வெளியான பரபரப்பான செய்திகள் அனைத்துமே ஆற்று மணல் கொள்ளை மற்றும் அது சார்ந்த ஊழல்களை அடிப்படையாகக் கொண்டவை.. வடமாவட்ட ஆற்று மணல் ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியில் தொடங்கி தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வரை அனைவரின் வீடுகளிலும் வருமானவரி சோதனையில் கிடைத்த பணம் முழுவதும் மணல் கொள்ளை மூலம் கிடைத்தவை. இதில் நடந்த ஊழலை உணர முடியும்.
மணல் விற்பனையை முறைப்படுத்துவதாக கூறியும், அரசின் வருவாயை அதிகரிக்க போவதாக கூறியும் கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆற்று மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டன. மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட போதும், அதில் இருந்து ஆற்று மணலை அள்ளி சென்று வேறு இடத்தில் வைத்து விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.
மணல் குவாரிகளில் இருந்து தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மணல் வெட்டி எடுக்கப்பட்டு, வேறு இடத்தில் வைத்து விற்பனை செய்யப்படும் என அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மை நிலை வேறாக உள்ளது. மணல் குவாரிகளிலேயே தனியார் ஒப்பந்ததாரர்கள் விதிகளை மீறி இயந்திரங்கள் மூலம் மணலை அள்ளி, கொள்ளை விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
கடந்த 2003ம் ஆண்டுக்கு முன் ஒவ்வொரு கிராம அளவில் மணல் அள்ள சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அரசுக்கு வருவாய் வந்தாலும் ஆட்சியாளர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதனால் மணலிலும் பணம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மொத்தமாக ஒப்பந்தக்காரர்களிடம்  கோடிகளில் பணம் வசூலிக்கும் நோக்குடன் தான் ஆற்று மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டன.
மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு கலெக்டர்களின் வருவாய் அதிகரித்தது. ஆனால், அரசின் வருவாய் அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் ஊழல்கள்.
உதாரணமான ஓர் ஒப்பீட்டைப் பார்ப்போம். 2003 – 4ம் ஆண்டில் தான் மதுக்கடைகளும் அரசுடமையாக்கப்பட்டன. அந்த ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.3639 கோடியாக இருந்தது. அதன்பின்  10 ஆண்டுகள் கழித்து 2013-14ம் ஆண்டில் இது ரூ.23,401 கோடியாக அதிகரித்தது.
ஆனால், 2003 – 4ம் ஆண்டில் ரூ.150 கோடியாக இருந்த மணல் வருமானம் 10 ஆண்டுகள் கழித்து 2013-14ம் ஆண்டில் ரூ.133.37 கோடியாக குறைந்து விட்டது. மணலை விட மணல் வருவாயை கலெக்டர்கள் அதிகமாக சுரண்டியது தான் இந்த நிலைக்கு காரணம்.
தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் ஒரு நாளைக்கு 8300 லாரிகளில் மணல் மட்டுமே வெட்டி எடுக்கப்படுவதாக கலெக்டர்கள் கணக்கு காட்டுகின்றனர். ஆனால், தமிழகத்தில் ஒரு லட்சம் மணல் லாரிகள் உள்ளன. ஒவ்வொரு லாரிக்கும் தினமும்  ஒரு முறை மணல் அள்ளுவதாக வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஒரு லாரி மணல் சராசரியாக ரூ.10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.100 கோடியும், ஆண்டுக்கு ரூ.36,500 கோடியும் வருமானம் கிடைக்கிறது.
மணல் கொள்ளை

கடந்த 2003 -4 முதல் இப்போது வரையிலான 13 ஆண்டுகளில் மணல் விற்பனையாளர்களுக்கு சுமார் ரூ.4.75 லட்சம் கோடி வருமானம் கிடைத்த நிலையில், அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.2000 கோடிக்கும் குறைவு தான். மீதமுள்ள வருமானம் முழுவதும் ஆட்சியாளர்கள், அவர்களின் தரகர்கள், மணல் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பது தான் வேதனையான உண்மை.
மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், இப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை வழங்குவது, அவர்களிடம் இருந்து அதற்கான கையூட்டைப் பெறுவது, மேலிடத்திற்கு வழங்குவது உள்ளிட்ட பணிகளை அவர் தான் செய்தார்.
ஆற்று மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களுக்கு சென்றன. அதன்பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்தின் கஜானாவையும், அவர் மூலம் மேலிடத்தின் கஜானாவையும்  நிரப்பிய பிறகு  எஞ்சிய சிறு தொகை மட்டும் தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டது.
மணல் கொள்ளை மற்றும் அது தொடர்பான ஊழல்களை தடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி ஆக்கப்பூர்வமான பல முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 13 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
மணல் கொள்ளையை தடுத்து, அரசின் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில்  பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியுள்ளனர். பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் கீ.லோ. இளவழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதனடிப்படையில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதன்மீது அப்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தென்மாவட்டங்களில் மணல் கொள்ளையை தடுக்கும் நோக்குடன் தாமிரபரணி, மணிமுத்தாறு ஆகிய ஆறுகளில் ஓமலூர் தமிழரசு தலைமையிலான பா.ம.க. சட்டப்பேரவைக் குழு நேரடியாக ஆய்வு மேற்கொண்டது. 25 அடி ஆழத்திற்கு மணல் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவது குறித்த ஆதாரங்களை பா.ம.க. குழுவினர் சேகரித்ததை அறிந்த மணல் கொள்ளையர்கள் அவர்களை படுகொலை செய்ய முயற்சித்தனர்.
மணல் கொள்ளை குறித்த ஆதாரங்களை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தவுடன், அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக திமுக அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், 8 ஆண்டுகளாகியும் அ.தி.மு.க, தி.மு.க எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆற்று மணல் கொள்ளையை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஓர் ஆட்சியில் ஆறுமுகசாமி, கே.சி. பழனிச்சாமி என்றும், இன்னொரு ஆட்சியில் சேகர் ரெட்டி என்றும் ஒப்பந்ததாரர்கள் தான் மாறுகிறார்களே தவிர, மணல் கொள்ளையும், ஊழலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
ராமதாஸ்

அதனால் தான் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எந்த திட்டமாக இருந்தாலும் அதை ரத்து செய்யும் திமுக அரசு, இத்திட்டத்தை முழு சம்மதத்துடன் செயல்படுத்தியது. இப்போது கூட சேகர்ரெட்டிக்கு வழங்கப்பட்டிருந்த மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை  இன்னும் அதிக  தொகைக்கு ஆறுமுகசாமிக்கு வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கிடைக்கும் அரிய இயற்கை வளங்களான தாது மணல், ஆற்று மணல், கிரானைட் ஆகியவற்றை வெட்டி எடுப்பதையும், விற்பனையும் முறைப்படுத்தினாலே தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும்.
தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களை  அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அடைத்து விட முடியும். ஆனால், அனைத்து  முன்னேற்றங்களுக்கும் ஊழல் தான் பெருந்தடையாக இருக்கிறது.
எனவே, ஆற்று மணல் குவாரிகளின் நிர்வாகம் மற்றும் ஆற்று மணல் விற்பனையை தனியாரிடம் இருந்து பறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த மணல் கொள்ளை மற்றும் ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்” இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.