சென்னை: புதிதாக சென்னைக்கு அருகே பரந்தூரில் அமைய உள்ள பசுமை விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களில் இதுவரை 1000 ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக ரூ.400 கோடி வழங்கப்பட்டு உள்ளதாகவும் வருவாய்த்துறை அறிவித்துள்ளது.

சென்னைக்கான இரண்டாவது பன்னோக்கு விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இது   பசுமைவெளி விமான நிலையமாக உருவாக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன.  இந்த பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் 5,320 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இது காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரு தாலுகாக்களில் பரந்தூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சார்ந்தது. விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பு ரூ. 29,150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் எதிர்ப்பை மீறி விமான நிலையத்திற்கான பணிகள் நடைபெற்ற வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்ற வருகிறது. விமான நிலையத்தின் அடுத்த கட்ட மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், நில எடுப்புப் பணிகளை வருவாய்த் துறை 21 யூனிட்கள் வாயிலாகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அரசு நிலங்கள் போக, மீதமுள்ள 3,774 ஏக்கர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . இதில்,  கடந்த செப்டம்பர் மாதம் வரை 12 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கியிருந்தனர். அக்டோபர் மாத முடிவில், இதுவரை மொத்தம் 1,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக நில உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ. 400 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1,000 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.