சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் தர தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. ஊரடங்கால் தொழிலாளர்களும், ஏழை, எளிய மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றன. இந் நிலையில் தமிழக அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் தனியாக நிவாரணம் தர தடை விதிக்கப்பட்டுள்ளது. சமைத்த உணவுகள், நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது.
நிதியாக இருந்தால் முதல்வரின் நிவாரண நிதிக்கும், பொருளாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம் தரலாம். மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் நிவாரண பொருட்களை அளிக்கலாம்.
சில நபர்கள், அரசியல் கட்சிகள், கட்சியினர் நேரடியாக பொருட்களை வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும். அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாகக் கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது