டெல்லி:
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு சில நாட்களில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் தீர்ப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து கூறியுள்ள உ.பி. மாநில டிஜிபி, ஓ.பி.சிங், அயோத்தி தொடர்பான பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சர்ச்சைக்குரிய பதிவுகளை பதியும் நபர்கள்மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தொடர்ந்து 40 நாட்கள் நடத்தி முடித்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக உ.பி. மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்க ளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த, உத்தரபிரதேச டிஜிபி ஓ.பி. சிங், சமூக ஊடக தளங்களை அதிகாரிகள் குழுவினர் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு ஆட்சேபனைக்குரிய அல்லது சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடுபவர்கள்மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னதாக, மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படுத்தினாலோ, சமூக ஊடக தளங்களில் அவதூறாக பதிவு செய்தாலோ, அவர்கள் மீதுதேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று கூறினார்.
மாநிலத்தின் சட்டம் குழுங்கை பராமரிக்க “நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறோம். எந்தவொரு சூழ்நிலை யிலும், யாரும் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் புலனாய்வு இயந்திரங்கள் தயாராக உள்ளன. தேவைப்பட்டால், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் அமைப்புகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்பாயும்,” என்றும் எச்சரித்தார்.
உ.பி. டிஜிபியின் இந்த அதிரடி உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.