திருவண்ணாமலை: சமூக ஆர்வலர் கொலை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட  நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி செங்கம் சாலை கிரிவப்பாதையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்த குளம் அருகே காலை 6 மணியளவில்  சமூக ஆர்வலர் ஒருவர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.  விசாரணையில் கொலை செய்யப்பட்டது, சமூக ஆர்வலர்  ராஜ்மோகன்சந்திரா என்பதும், கொலையாளிகள் அவரது  முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக, இந்த கொலை நடந்ததாக கூறி,  திருவண்ணா மலை டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கொலை வழக்கு தொடர்பாக,   திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை எம் ஜி ஆர் நகரை சேர்ந்த அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் வயது (45)  உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அவரது உறவினர்களான,  திருப்பதி பாலாஜி, அவரது தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி வயது (41), திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் வயது (32), தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் வயது (39), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் வயது (42), விஜயராஜ் வயது (41), வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சடையன் வயது (40), போளூர் தாலுகா செங்குணம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி வயது (50) ஆகிய 10 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் இரண்டு நபர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வழக்கில் சம்பந்தப்பட்ட   திருப்பதி பாலாஜியின் அண்ணன் செல்வமும், தந்தை காசி என்ற வீராசாமியும் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி  பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.  தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.