ஸ்ரீநகர்: நரேந்திர மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், தற்போதுவரை ஏழு ஆணையங்களை இழுத்து மூடியுள்ளது.
இதில் மனித உரிமை, தகவல் உரிமை, குறைபாடுள்ளோருக்கான உரிமை ஆணையங்களும் அடங்கும். புதனன்று வெளியிடப்பட்ட இதற்கான ஆணையில், அக்டோபர் 31இலிருந்து இது அமல்படுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட ஆணையங்களாவன:
. ஜம்மு காஷ்மீர் மனித உரிமை ஆணையம்
. மாநில தகவல் ஆணையம்
. நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்
. மாநில மின் ஒழுங்கு ஆணையம்
. மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
. மாநில குறைபாடுள்ளோருக்கான ஆணையம்
. மாநில பொறுப்பேற்பு ஆணையம்
இந்த ஆணை வெளியிட்டது குறித்து மாநிலத்தின் பொது நிர்வாகத் துறை கூறும்போது, காஷ்மீர் மறு ஒருங்கிணைப்பு 2019 விதியின் படி அமைக்கப்பட்ட இந்த ஏழு ஆணையங்களும் அக்டோபர் 31 இலிருந்து மூடப்படுவது செயலுக்கு வரும் என்றது.
இந்த ஆணையங்கள் வெளியிட்ட ஆணைகள், மேற்கொண்ட செயல் திட்டங்களின் நிலை குறித்து எதுவும் தெளிவாக்கப்படவில்லை. அதேவேளை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், தலைமைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிக் காலம் அதே தேதியில் முடிவுக்கு வருகிறது.
அதே அக்டோபர் 31 தான் ஜம்முவையும் காஷ்மீரையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் நாளாகும்
பல யூனியன் பிரதேசங்கள், உதாரணத்திற்கு, புதுச்சேரி, டெல்லி போன்றவைகள் இத்தகைய ஆணையங்களைப் பெற்றிருக்கும்போது இந்த மக்களுக்கு ஏன் அவை மறுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகாத ஒன்றாகும்.