புதுடெல்லி: கர்தார்பூர் ஸ்தலத்திற்கு செல்லும் சீக்கிய யாத்ரிகர்கள், தங்களுடன் ரூ.11000 பணம் மற்றும் 7 கிலோ எடையுள்ள பொருட்களை மட்டுமே எடுத்துச்செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளன அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.

உள்துறை அமைச்சகம் இதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 75 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஆகியோர் குழுவாகத்தான் செல்ல வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கர்தார்பூர் ஸ்தலத்தை தாண்டி, வேறெங்கும் யாத்ரிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப் பைகள் போன்றவற்றையேப் பயன்படுத்த வேண்டுமெனவும், காலையில் புறப்பட்டு, அதேநாளிலேயே திரும்பி விட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கர்தார்பூர் ஸ்தலத்திற்கு செல்ல விரும்பும் யாத்ரிகர்கள், செல்லும் தேதிக்கு முன்னதாகவே ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டுமெனவும், அனுமதிக்கப்படும் நபர்களுக்கு, அதுகுறித்த தகவல் 4 நாட்களுக்கு முன்னர்தான் தெரிவிக்கப்படும் என்றும்; எனவே, யாத்ரிகர்கள் தங்களின் பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துவைக்க வ‍ேண்டுமெனவும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பயணிகள் முனைய கட்டடத்திற்குள், புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் புகையிலை உள்ளிட்ட எந்த வஸ்துகளும் அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.