கௌஹாத்தி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாட்டின் இணக்கத்தை பாதிக்கும் அளவு மனித வாழ்வு குறித்து துளியும் கவலையற்று வன்முறை அதிகரித்து வருவதானது, தனக்கு வேதனைத் தருவதாகக் கூறியுள்ளார்.

வடகிழக்கில் உள்ள ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் ஸ்தாபன நாளின்போது இதனை தெரிவித்தார் பிரணாப். அவர் மேலும், தேசத்தின் பிரச்சனைகளுக்கு நியாயமான பொது ஈடுபாட்டின் தேவை உள்ளதென்றும், அம்மாதிரியான ஈடுபாடு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு இன்றியமையாத ஒன்றென்றும் கூறினார்.

“இன்று நான் மிகுந்த கவலையுடன் கவனித்த ஒன்று: வேற்றுமையின் காரணமாக வன்முறை அதிகரிப்பதாகும். இதன் காரணமாக நாம் இணக்கத்தைக் கட்டிக் காக்கும் ஆற்றல் பாதிக்கப்பட்டுள்ளது“ என்று ‘இந்திய சமூகத்தில் சகிப்புத்தன்மை‘, எனும் தலைப்பில் உரை நிகழ்த்தும்போது தெரிவித்தார்.

அவர் மேலும், “இதுபோன்ற வன்முறைகள் புற உடலை மட்டும் பாதிப்பதில்லை, அது மனம், அறிவு, பொருளாதாரம் போன்றவற்றையும் அழிக்கிறது. இங்கு சகமனிதரின் உயிர் பற்றி எந்த கவலையும் இல்லை. இங்கு நம்பிக்கையின்மையும் வெறுப்பும்; சந்தேகமும் பொறாமையும் உள்ளது.

பாரத ரத்னா விருதுபெற்ற அவர், நமது நாகரிகத்தை அமைப்பது அமைதியான சகவாழ்வு, கருணை, வாழ்விற்கான மரியாதை, இயற்கையுடனான இணக்கம் ஆகியவையே என்றார்.

“ஒவ்வொரு முறையும் ஒரு தனிநபர், குழந்தையோ, பெண்ணோ வன்முறைக்குள்ளாக்கப்படும் போது, இந்தியாவின் ஆன்மா காயப்படுகிறது.

ஆத்திரத்தின் வெளிப்பாடு சமூக ஆடையினைக் கிழித்தெறிகிறது. ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றி வன்முறை அதிகரிப்பதைக் காண்கிறோம். இந்த வன்முறையின் இதயத்தில், இருள், பலம், நம்பிக்கையின்மையே இருக்கிறது“, என்றார் அவர்.

சகிப்புத்தன்மை குறித்து அவர் விளக்கும்போது, “சகிப்புத்தன்மை ஒளிரும் மனதின் ஓர் அடையாளமாகும். இதுவே, தொன்றுதொட்டு நம்புகின்ற அஹிம்சையின் வெளிப்படுத்துதலாகும். அஹிம்சையே, இந்திய நெறிமுறையின் மையமாகும். மகாத்மா காந்தி, நவீன காலத்தின் அதன் ஓங்கிய குரலாகும்“, என்றார்.

இன்று, என்றுமில்லாத அளவு, நமது தேசப்பிதா மகாத்மா காந்தி வெறுமனே சகிப்புத்தன்மை மட்டுமல்ல, பரஸ்பர மரியாதையைக் காட்டுமளவு அஹிம்சையைக் கொண்டிருந்தார் என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும். இன்று நிலவும் சூழல், நாம் நமது தேசப்பிதாவின் எதிர்பார்களுக்கேற்ப வாழ்கிறோமா என்று நம்மை கேட்டுக்கொள்ளப் பணிக்கிறது“, என்றார் அவர்.

“நாம், நமது உரையாடல்களை உடல் மற்றும் வாய்மொழி ரீதியான வன்முறையிலிருந்து விடுவிக்க வேண்டும். வன்முறையற்ற சமூகத்தில் தான் அனைத்துத் தரப்பு மக்களின் ஜனநாயக பங்களிப்பையும், உறுதி செய்ய முடியும். நாம்று கோபம், வன்முறை மற்றும் பூசலிலிருந்து அமைதி, இணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்கு இடம் பெயர வேண்டும்“, என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும் அவர், “பொது உரையாடல்களின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும். நாம் விவாதிக்கலாம், நாம் ஏற்கலாம், மறுக்கலாம், ஆனால் பலதரப்பட்ட கருத்துக்களின் தேவையை உணர வேண்டும்.

உரையாடல்கள் மூலம் மட்டுமே சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் நமக்குப் புரிந்துணர்வு கிடைக்கும்“, என்று அவர் விளக்கினார்.

இந்தியாவின் ஆன்மா, பன்முகத்தன்மை, பல்வகைமைப் போற்றுதல் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. மதச்சார்பின்மை, உள்ளடக்கத் தன்மை, நமது நம்பிக்கையின் அம்சமாகும் என மேலும் கருத்துரைத்தார்.