ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல், மதுசூதனன், மருது.கணேஷ், டிடிவி தினகரன் உள்ளிட்ட வி.ஐ.பி. வேட்பாளர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கிறது. இது குறித்து பரவலாய் பேசப்படுகிறது. இது ஒருபுறம் இருக்கட்டும்.. ஆர்.கே.நகர் தொகுதியின் எதிர்காலம்.. நிகழ்காலம் எப்படி இருக்கிறது.
அத்தொகுதிவாசியும், பாவையர் மலர் இதழின் ஆசிரியருமான வான்மதி மணிகண்டன் எழுதும் சிறப்புக்கட்டுரை:
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21ம் நாள் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்காக நடக்கவிருக்கிறது.
ஏப்ரல் 21 அன்று நடைபெற வேண்டிய இந்த தேர்தல் பல முறைகேடுகள் குறித்த புகார்களால் நிறுத்தப்பட்டு மீண்டும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.முதல்வரின் தொகுதி என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் வடசென்னை தொகுதி இது.கடந்த 2 ஆண்டுகளில் 4வது முறையாக, 2015ல் இடைத்தேர்தல், 2016ல் பொதுத்தேர்தல்,2017 ஏப்ரலில் இடைத்தேர்தல்(ரத்து),2017 டிசம்பர் இடைத்தேர்தல்(இதுவும் நிச்சயம் நடக்குமா என்று தெரியாது) இத்தனை முறை தேர்தலினால் மட்டுமல்ல இந்த தொகுதி மக்களின் பிரச்னைகளாலும் நாடே திரும்பி பார்க்கும் தொகுதியாக முக்கியத்துவம் பெற்றுவிட்டது ஆர்.கே.நகர் தொகுதி
அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி.என்ன குறைகள் முன்பு இருந்ததோ அதே குறைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன.மக்களின் வாழ்வாதாரமும் தொகுதியின் நிலையும் பல வருடங்களாய் ஒரு முன்னேற்றமுமில்லாமல்தான் இருக்கிறது.தேர்தலின் போது வாக்குக்கு பணம் தருகிறார்கள் என்பது உண்மை அதை மக்கள் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதும் உண்மை.அவர்களும் சும்மா தரவில்லை. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்ததும் விலைவாசியை உயர்த்தி இருமடங்காய் வசூலித்துவிடுகிறார்கள்.
பணம் வாரி இறைப்பவர்கள் இறைக்கட்டும் வாங்குபவர்கள் வாங்கிக்கொள்வோம். ஆனால் கொள்கையின்படிதான் நாங்கள் வாக்களிப்போம் என்கின்றனர் மக்கள்.ஒரு வாக்குக்கு பத்தாயிரம் என்று சொல்வார்கள், அது மக்கள் கையில் போய் சேரும்போது நாலாயிரம் ஆகியிருக்கும் இதிலேயே அவங்க அரசியல்வாதி புத்தியை காட்டிடுவாங்க.இவங்களை நம்பி எப்படி வாக்களிக்கச் சொல்கிறீர்கள் என்று மக்கள் திரும்ப கேள்வி கேட்கிறார்கள்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இந்த தொகுதி மக்களின் குறைகள் தொடர்பான மனுக்களை பெற தனி அலுவலர் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தண்டையார்ப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த மனுக்கள் பெறப்படும் என்றும் முன்னால் முதல்வர் அறிவித்திருந்தர்.அப்படி ஒரு குறை தீர்க்கும் நாள் கிடைத்திருந்தால் மக்கள் தங்கள் குமுறல்களை கொட்டித்தீர்த்திருப்பர்.அதில் பாதியாவது நிவர்த்தியாகி இருக்கலாம். அதற்கான சூழலே அமையவில்லை இந்த தொகுதி மக்களுக்கு. முதல்வர் தொகுதி என்கிற அந்தஸ்த்தை பெற்றதோடு சரி அதன் பலனை முழுமையாக அனுபவிக்காமலேயே இரண்டாவது இடைத்தேர்தலும் வந்துவிட்டது.
அப்படி என்னதான் இங்கிருக்கும் மக்களின் குறைகள் என்று அலட்சியமாய் பார்க்காதீர்கள். இங்கு அனைத்துமே குறைகள்தான். சென்னையின் மாற்றாந்தாய் பிள்ளை நிலையில் தான் இன்னும் வடசென்னை இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பெரிய பெரிய நிறுவன்ங்கள் இங்குதான் கோலோட்சுகின்றன. ஆனால் அதனை நிர்வகிக்கும் முதலாளிகள், பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் இந்த பகுதியில் வசிக்கக்கூட யோசிப்பவர்கள். ஏனென்றால் வடசென்னை எப்போதுமே உழைக்கும் மக்களைக் கொண்டது. ஆனால் அந்த உழைக்கும் மக்களை இன்று சோம்பேறி மக்களாய் மாற்றிய சாதனை இந்த அரசாங்கத்துக்கு உண்டு.. முன்பெல்லாம் அதிக நேரம் உழைப்பர். கை நிறைய கூலி வாங்குவர். மறைந்து மறைந்து ரகசியமாய் சாரயத்தை வாங்கி ஊற்றிக் கொண்டு கையிலிருக்கும் காசை பொண்டாட்டியிடம் பிள்ளைகளுக்காக கொடுத்துவிட்டு அமைதியாக படுத்துவிடுவர். இந்த நிலையே அசிங்கம் என்றிருந்த எண்ணத்தை இன்னும் அசிங்கப்படுத்தியிருக்கிறது இலவசங்களும் இப்படி அடிக்கடி நடக்கும் தேர்தலும்
எதுவும் உழைத்தால்தான் கிடைக்கும் என்ற நிலை மாறி யாருக்காவது கூழைக்கும்பிடு போட்டால் போதும் கூட்டத்தில் நின்று கோஷம் போட்டால் போதும் சாராயமும் பிரியாணியும் கிடைத்துவிடும் என சுயநலமாய் யோசிக்க வைத்ததுதான் இந்த அரசாங்கத்தின் சாதனை
இதில் பொண்டாட்டி என்ன செய்கிறாள், அவள் என்ன சம்பாதித்து எப்படி குடும்பத்தை நடத்துகிறாள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றாளா என்பதெல்லாம் தெரிந்துக் கொள்ளக் கூடிய தெளிவான மனநிலையில் ஒருத்தனும் இல்லை.
இதில் பெண்ணின் நிலை மிகப்பரிதாபம்.எவ்வளவு நாட்களுக்குதான் பாதி வயிறு சாப்பிட்டு பிள்ளைகளை பார்த்துக் கொள்வாள். தவறான பாதைக்கு அவளை இந்த சமூகம் தான் தள்ளுகிறது. வேசிகள் உருவாகுவதில்லை. இந்த சீர்க்கெட்ட சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறாள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த சீர்கேடு இத்தோடு நின்று விடுவதில்லை. சண்டை சச்சரவு கொலை என்று முடிகிறது. பிள்ளைகளாவது ஒழுங்காய் படித்து தங்கள் நிலையை உயர்த்தி கொள்ளுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அந்தோ பரிதாபம் என்று உங்களைப் பார்த்துதான் சொல்லத்தோன்றுகிறது.
பின், அப்பன் சாரயக்கடை,அரசியல் கோஷம் என்று நாள்தோறும் சீரழிய.பாதி வயிறு சோற்றுக்கு தாய் சோரம் போக குழந்தைகள் மட்டும்? அதுவும் அவ்வளவுதான்…சின்ன வயதிலேயே பீடி,சிகரெட்,பான்பராக் என்று ரோடு ரோடாய் சுற்றிக் கொண்டு கிடைக்கிற வேலைகளை செய்துக் கொண்டு, எதுவும் கிடைக்காத சமயத்தில் திருட்டு காரியங்கள்,போலீஸ் என்று எங்கே செல்லும் இந்த பாதை என்பதே தெரியாமல் அழிந்துக் கொண்டிருக்கிறது வடசென்னையின் ஒவ்வொரு குடும்பமும்.
இதில் யார் ஜெயித்து என்னத்தை கிழிக்கப் போகிறார்கள்? ஒரு ஆணியைக் கூட எவராலும் அசைக்க முடியாது.சில சமூக நலன் கொண்டவர்கள் இந்த பிள்ளைகளில் சிலரை நல்வழிப்படுத்தி படிக்க வைக்கலாம் என்று முயற்சி எடுத்தால் இங்கிருக்கும் அரசு பள்ளிகளின் அவலம் சொல்லி மாளாது. தனியார் பள்ளிகள் கொள்ளைகூடமாய் ஆகிவிட்டது. அடிப்படை வசதி,உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் கல்விதான்.அதுவே இங்கு மறுக்கப்பட்டு வருகிறது.இங்கேயே பிறந்து இங்கேயே இந்த மக்களோடு மக்களாய் வாழும் ஒருவர் நல்ல எண்ணத்தோடு சமுக அக்கறையோடு வந்தால் அவரின் பின்னால் போக காத்திருக்கிறார்கள் மக்கள். நானும் கட்சி நடத்துகிறேன் நானும் வேட்பாளர்தான் என்று டீவியிலும்,ட்வீட்டரிலும், பாரீன் ட்ரிப் அடித்துக் கொண்டும் இருப்பவர்கள் இங்கு தேவையில்லை.
அரசிலுக்கு வரப் போகிறேன் என்று சொல்லும் ஒருவர் நான் பல காலமாய் சென்னையில்தான் இருக்கிறேன் ஆனால் வடசென்னை ஆர்.கே.நகர் பகுதிக்கெல்லாம் வந்ததேயில்லை. என இந்த மக்களிடமே சொல்வதை பெருமையாக உண்ர்கின்ற கொடுமையும் நடக்கிறது
கல்விக்கு அடுத்து மருத்துவம்.இதன் கொடுமை அதைவிட கொடுமை. ஸ்டான்லி,காச நோய் மருத்துவமனைகள் இங்கிருக்கின்றன. ஆனால் சாதாரணமக்கள் பெரும்பாலும் பயன்பெறுவதில்லை. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அரசு மருத்துவமனை என்கிற அலட்சியத்தை ஏற்படுத்தியது இந்த அரசாங்கம் தானே
குடிநீரை மக்கள் எல்லா காலத்திலும் அலைந்து திரிந்துதான் சேகரிக்கிறார்கள். குழாய்களில் அடிக்கடி கழிவுநீர் கலந்துதான் குடிநீர் வருகிறது.கழிவு நீர் பிரச்னை மிக கொடுமை. எல்லாப்பகுதிகளிலும் பழைய பைப்புகள் உள்ளன. ஆங்காங்கே சாலைகளில் கழிவுநீர் ஓடுவதை காணமுடியும்.பகலெல்லாம் கழிவு நீர் நாற்றம் என்றால் இரவில் கொசுக்களின் தொந்தரவு. கடவுளே, ஏனிப்படி இந்த மக்களை சோதிக்கிறாய் என்று மனம் அழுகின்றது.
தண்டையார்பேட்டை பாலத்துக்கு அந்தப் பக்கம் இருக்கிற மக்கள் செத்தப் பிறகு அடக்கம் பன்றதுக்கு இடுகாடு இல்லை.இன்று நேற்றல்ல 40 வருடமாய் இந்த அவலநிலை தொடர்ந்து வர்கிறது. வடசென்னை மக்கள் வாழவும் தகுதியில்லாவர்கள். அவர்கள் செத்தப் பிறகும் நடு ரோடுதான் என்று எழுதியிருக்கிறது போல.
காவல்நிலையங்கள் இங்கிருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு பிரச்னைக்கு பத்தவே பத்தாது. உடனடியாக தீர்க்க்க் கூடிய பிரச்னைகளைக்கூட வடசென்னை மக்கள்தானே என்கிற அலட்சியத்தால் சரி செய்யாமலேயே விட்டுவிடும் அவலம்..இதனையெல்லாம் உடனடியாக கவனம் செலுத்தி தீர்க்கக்கூடிய தலைவன் யாருமில்லை என்பதே உண்மை.
வயதானவர்கள் அதிகம் உள்ளவர்கள் தொகுதி என்றுக் கூட இதனை சொல்லலாம். ஆனால் அவர்களுக்கான உதவித்தொகை வழங்க இங்கு முறையான ஏற்பாடுகள் இல்லை. கேட்டால் அதிகாரிகள் இல்லை. ஃபண்ட்ஸ் இல்லை வந்தப் பிறகு சேர்த்து தருகிறோம் என்ற அலட்சியமான பதில் வருகிறது
ஐ.ஓ.சி பகுதியில் ஒரு பேருந்து நிலையம் கிடையாது.பல வருடமாய் கேட்கப்பட்டு ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதியாய் சொல்லப்பட்ட விஷயம் இது.இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
மிக முக்கியமாய் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு.வடசென்னை மக்களைத்தவிர வேறு யாராவது அந்த இடத்தில் ஒரு பத்து நிமிடம் நின்று சுவாசிக்க முடியமா என்று கேட்டுப் பாருங்கள்.மாற்றுத்திட்டங்கள் ஆயிரம் வந்தது வெறும் ஏட்டளவில்.இவர்கள் சொன்னால் அவர்கள் கிடப்பில் போட்டு விடுவர்.
போக்குவரத்து பற்றி சொல்வதானால் பஸ்,இரயில்,ஆட்டோ,கார், என தனிதனியாகத் தான் சொல்ல வேண்டும், இரவு பத்துமணிக்கு மேல் தென் சென்னையிலிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வடசென்னைக்கு வர முடியாது. ஏன்னா யாரும் வர மாட்டாங்க என்பதே உண்மை, அய்யோ தண்டையார்பேட்டையா ரோடு நல்லா இருக்காது, லைட் கிடையாது,ஒரே இருட்டாய் இருக்கும் சாலையில் எவனாவது திடிரென்று புகுந்து வழிப்பறி பண்ணிடுவாங்க,கையில் இருக்கும் காசு, வாட்ச் ,இப்போ செல்போன் முதற்கொண்டு அடிச்சிக்கிட்டு போயிடுவாங்கன்னு சொல்ற கேவலமான நிலையில் தான் தொகுதி இருக்கு.
பிரபலமான காசிமேடு மீன்பிடி துறைமுகம் பராமரிப்பே இல்லாமல், வசதிகளே இன்றி கிடக்கிறது. ஆனால் இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. ஆனால் ஆள்வோர் கண்டுகொள்வதே இல்லை.
டாஸ்மாக் என்கிற அரக்கன் இருக்கிறவரை ஒன்னும் செய்ய முடியாது.ஆர்.கே நகர் மக்களின் மிக முக்கிய பிரச்னை இந்த கடைகள்தான்.பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் வெளியில் செல்லும் பெண்கள் ஒரு வகையில் அவதிப்படுகின்றனர் என்றால் சின்ன வயது ஆண்பிள்ளைகளை நீயும் வாயேன் என்றழைக்கிறது இந்தக் கடைகள்.அப்பன் சாப்பிட்றான். ஆத்தாலும் சண்டை வந்தால் அடிக்கிறாள் நாம மட்டும் ஏன் ரொம்ப யோக்கியமாய் இருக்க வேண்டும் வா மச்சி ஒரு குவார்ட்டர் அடிக்கலாம் என்கிற மனநிலை தான் எல்லா பிள்ளைகளின் மனத்திலும். திருத்த வேண்டிய அப்பனும் அம்மையும் சரியில்லை, கேள்விக்கேட்க வேண்டிய சமூகமும் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது அப்புறம் என்ன செய்வது? ஒரு குவார்ட்டர் அடிச்சிட்டுதான் வழி யோசிக்க வேண்டும் போல?
பக்கிங்காம் கால்வாய் ஆற்றின் கரையோரம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள்.இவர்களின் வாழ்க்கை நிரந்தரமில்லை.மழை வந்தால் காணாமல் போவது இவர்களின் குடிசைகள் மட்டுமல்ல இவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும்தான்
முன்னாள் முதல்வர் புண்ணியத்தில் கிடைத்த மெட்ரோ ரெயில் திட்டம் தவிர வேறு எந்த பலனும் முன்னேற்றமும் இல்லை தொகுதியில் .எப்பவோ ஆரம்பித்த மெட்ரோ ரெயில்வே பாதை அமைக்கும் பணி இதைவிட மெதுவாக எங்கும் யாராலும் செய்ய முடியாது.அந்தளவிற்கு மெதுவாய்தான் நடக்கிறது. எப்போ வேணாலும் மெட்ரோ ரயில் வரட்டும்.ஆனால் அது வரும் வரை பாதையை மாற்றிவிட்டு பத்து நிமிட நடக்கும் தூரத்திற்கு இரண்டு மணி நேரம் சுற்றி வர வைப்பதை எத்தனை காலத்திற்கு பொறுத்துக் கொள்வது.
இந்த தொகுதியைச் சுற்றி எதுவும் விரைவாய் சட்டென்று நடந்து மக்களுக்கு பலன் அளித்ததாய் வரலாறே கிடையாது.குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைப்பதற்கு கூட நாள் நட்சட்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள். ஏனென்றால் இதனை தட்டிக் கேடக திராணியற்று போய் விட்டனர் ஆர்.கே.நகர் மக்கள்.
இவனுங்களுக்கு என்ன வாய்…ஒரு ஓட்டுக்கு இவ்வளவுன்னு வாங்கிக்கிட்டு மூடிக் கிட்டு போயிடணும். ஐந்து வருடத்திற்கான வாய்க்கரிசிதான் அது என்கிற கேவலமான நிலையில் மக்களை அடிமைகளாய் வைத்திருக்கின்றனர். எதுவும் பேச முடியாது. இதையெல்லாம் தெரிந்தேதான் மக்கள் இருக்கின்றனர்.
ஆறரை ஆண்டுகளாய் இது ஆளும் கட்சியின் தொகுதி.மழை வெள்ளத்தின் போது பார்வையிட வந்த அமைச்சரை மக்கள் விரட்டி அடிக்கும் தகுதி இவர்களிடம் இருக்கிறதா? கை நீட்டி காசு வாங்கிய இடத்தில் வாய் பேச இயலுமா? உன் அளவு அவ்வளவுதான் இத்தோடு உனக்கான உரிமை முடிந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்லும் அரசியலாகிவிட்டது இப்போது. ஐந்து வருடங்களில் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அதைக் கேட்கும் தகுதியை நீ இழக்கின்றாய் என்று மக்களுக்கு புரிய வேண்டும் என்றால் அடிப்படை அறிவு வளர வேண்டும். ஆனால் இன்னமும் இலவசங்களும் கையூட்டும் கொடுத்து கொடுத்தே மக்களை மாக்களாய் வைத்திருப்பது இந்த அரசியல்வாதிகள்தான்
இத்தனை விஷயங்களையும் வேறு எங்கோ உட்கார்ந்துக் கொண்டு, காதில் வாங்கிய,தினசரியில் படித்த, இணையதளத்தில் தெரிந்துக் கொண்ட செய்திகளாய் உங்களுக்கு சொல்லலை. 30 வருடங்களாய் இந்த மக்களோடு மக்களாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வடசென்னைவாசி. முக்கியமாய் ஆர்.கே.நகர் தொகுதிவாசி என்கிற முறையில் சொல்கிற உண்மையான வார்த்தைகள் இவை.
எங்களுக்கு அடிப்படை வசதிகளைக் கொடுங்கள்,உழைக்க வாய்ப்புத்தாருங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தாருங்கள்,கல்வியும் மருத்துவமும் தாருங்கள்.மற்ற வசதிகளை வாழ்வதற்கு தேவையான மற்ற வசதிகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என கெஞ்சுகிற நிலையில்தான் ஆர்.கே.நகர் தொகுதி இப்போது அநாதையாய் கையேந்தி நிற்கின்றது.
நாங்கள் ஆதரவு அளிக்க வேண்டாம் எங்களுக்கு ஆதரவும் ஆறுதலும் தேவை என்கிற நிலையில்தான் நாங்கள் இருக்கின்றோம்.அதை இரட்சிக்கும் தேவ தூதனை எதிர்பார்த்து…………………..!