டெல்லி: இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என நாடாளுமன்றத்தில், திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்தியஅரசு பதில் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20ந்தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், அவையை முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்தியஅமைச்சர்கள் எழுத்து மூலம் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தமிழக மீனவர்கள் கைது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 74 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட நாடுகளோடு புரிந்துணர்வை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 பயணமாக இந்தியா வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி உள்பட பலரை சந்தித்த நிலையில், 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.