சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பிற்கு பிறகு, கடந்த ஒரு வாரத்தில் 57,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. சாலைகள் மற்றும் நகரின் பல பகுதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதை நேரடியாக ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கை நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, GCC இன் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளம் காரணமாக குப்பைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர், இந்த பணிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது என்றவர்,. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 57,000 டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“சென்னையில் நேற்று ஒரேநாளில் 10,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது: சென்னையில் 2 நாட்களில் 60% தண்ணீர் வெளியேற்றப்பட்டது. புயலின்போது பெய்த அதி கனமழையால் சென்னையில் 67 டிஎம்சி தண்ணீர் வந்திருக்கக்கூடும். அதிக மழை பொழிந்த நிலையில் கடலும் தண்ணீரை உள்வாங்காதததால் வெள்ளம் ஏற்பட்டது,”என்றும் தெரிவித்தார்.