சென்னை: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்றும், 34 பேருக்கு மட்டுமே ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், அதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை முடுக்கி விட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று, மருத்துவ மனைகளில் உள்ள படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை, வார் ரூம் போன்றவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து, இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒமிக்ரான் வார்டு மற்றும், ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா 1வது மற்றும் 2வது அலையின் தாக்கங்ததின்போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளை போலவே இந்த ஒமிக்ரான் பாதிப்புக்கும் நடவடிக்கைகளை தொடர்கின்ற வகையில் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இதுவரை வெளிநாடுகளில் வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில், இ 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது, தமிழமருத்துவத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவர்களில், இந்திய மருத்துவத்துறையால் 34 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டவர்களின் மாதிரிகள் ஆய்வு முடிவு வர தாமதமாகிறது என்று கூறியவர், தமிழ்நாட்டில் ஏற்கனவே மரபியல் ஆய்வு கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஒமிக்ரான் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகளை அறிவிக்க மத்திய அமைச்சகம் மற்றும் மருத்துவக் குழுவினர்களிடம் வலியுறுத்தப் படும் என்றார். தமிழகத்தில் ஒமிக்ரான் பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிடும் அனுமதியை மத்திள அரசு வழங்கினால் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு விவரங்களை வெளியிட முடியும்.
மேலும், பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பாதிப்பு அதிகமில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு RTPCR பரிசோதனை மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கவும் ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுகுறித்தும் மத்தியஅரசின் குழுவினரிடம் வலியுறுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவது ஜனவரி 3, 2022 முதல் தொடங்கும், முதல்வர் ஸ்டாலின் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைப்பார்.
செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் இப்போது 10,000 பரிசோதனைகளுக்குப் பதிலாக 20,000 பரிசோதனைகளைச் செய்கிறோம். கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுகிறோம் மற்றும் அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துமாறு கூறுகிறோம் என்று தெரிவித்தார்.