சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை (மே 15ந்தேதி மாலை 6மணி நிலவரப்படி) 1,55,898 விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களில், 51,753 பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு மே 15ந்தேதி மாலை 6 மணி நிலவரப்படி, 1,21,119 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) 2025 விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒருமுகப்படுத்தப்பட்ட கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய கடந்த ஒன்பது நாட்களில், மே 15 மாலை 6மணி நிலவரப்படி 1,55,898 விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் மற்றும் 89,694 பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் மொத்தம் 51,753 விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை TNEA இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். , விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை ஆன்லைன் போர்ட்டலில் பதிவேற்றம் செய்தால்தான் விண்ணப்ப செயல்முறை முழுமையடைந்ததாகக் கருதப்படும்.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் தகவல்படி, இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பொறியியல் ஆர்வலர்களுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும். பொறியியல் ஆர்வலர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூன் 6ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 9 அல்லது அதற்கு முன் ஆகும். ரேண்டம் எண் ஜூன் 11ஆம் தேதி ஒதுக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி மற்றும் ஆன்லைன் மூலம், ஜூன் 10 முதல் ஜூன் 20 வரை நடைபெறும். பெரிதும் எதிர்பார்க்கப்படும் தரவரிசைப் பட்டியல் ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால், மாணவர்கள் குறைகளைத் தெரிவிக்க ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை குறைதீர்க்கும் மையம் செயல்படும்.
அதுபோல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு மே 15ந்தேதி மாலை 6 மணி நிலவரப்படி, 1,21,119 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 88,045 பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.