திருவனந்தபுரம்: கேரளாவில் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை மனித வாழ்விடங்களிலிருந்து மீட்டு வனத்தில் விட்டு காப்பாற்றிய வாவா சுரேஷ் என்ற நபர், விரியன் ரக பாம்புக் கடித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனித வாழிடங்களுக்குள் நுழைந்துவிடும் பாம்புகள் மட்டுமின்றி, வேறுபல உயிரினங்களையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசென்று விட்டு, அவற்றைக் காப்பாற்றி வருபவர் 46 வயதான வாவா சுரேஷ். இவர் கேரளா மட்டுமின்றி, மாநிலத்திற்கு வெளியிலும் பிரபலம்.

இவர், கொல்லம் மாவட்டத்திலுள்ள பத்தனாபுரம் என்ற இடத்தில், ஒரு சுவற்றிலிருந்து சுருட்டை விரியன் ரகத்தைச் சேர்ந்ததாக கூறப்படும் பாம்பு ஒன்றை வெளியே மீட்க முயன்றபோது, அந்தப் பாம்பு இவரின் நடுவிரலில் தீண்டியது.

இதனையடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு தீவிர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் 72 மணிநேரங்கள் தீவிரக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர், ஏற்கனவே பலமுறை பாம்புகளால் கடிக்கப்பட்டுள்ளதால், இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள விஷ முறிவு மருந்து எந்தளவிற்கு தாக்கம் ஏற்படுத்தும் என்று தெரியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

இவரின் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சுரேஷூக்கு ஏற்கனவே மருத்துவர்கள் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.