சென்னை:
செம்மரக்கடத்தல் விவகாரத்தில் அதிமுகவினர் ஈடுபடுவதாகவும் அதற்காக அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
“திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சித் தலைவராக இருப்பவர், அதிமுகவைச் சேர்ந்த .பார்த்திபன். இவருக்கு சர்வதேச செம்மரக்கட்டை கடத்தும் கும்பலோடு தொடர்பு வைத்துள்ளதை, ஆந்திர காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டு, இது போன்ற நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருக்கிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது மக்கள் மத்தியில் பெருத்த கோபத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு பலனளிக்க கூடிய வகையில் செயல்பட வேண்டிய ஆளுங்கட்சியினர், ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம், துணைகொண்டு சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான செயல்களில் ஈடுபடுவது, ஆளும் அரசுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 20 பேர் செம்மரக்கட்டை கடத்தல் விவகாரங்களில் ஆந்திர காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்ட நிகழ்வை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதை இந்த அரசு உடனடியாக தடுத்து, மக்களுக்கு பலனளிக்கும் ஆட்சியை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையான ஆட்சியை இந்த அரசு வழங்கிட வேண்டும். ” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
aiadmk-persons-involved-in-red-sandal-smuggling