தூத்துக்குடி,: திருச்செந்தூர் அருகே உள்ள கடற்கரை கிராமமான மணப்பாடு பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அந்த  திட்டத்தை கைவிட வேண்டும்  என மனப்பாடு உள்பட அந்த பகுதி மீனவ மக்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருச்செந்தூர் அருகே  மணப்பாட்டில், தனியார் ஒத்துழைப்புடன் 99 வருட குத்தகை விடும்,  சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை  திமுக அரசு கைவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புளூ எக்னாமி திட்டத்தின் கீழ் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எட்டு இடங்களில் தனியார் பங்களிப்புடன் சிறிய அளவிலான துறைமுகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீட்டாளர்களுக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த துறைமுகங்கள், 30 முதல் 99 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்பட உள்ளன. இங்கு கடல் சுற்றுலா போக்குவரத்து, கப்பல் கட்டுமான தொழில், மீன் உணவு தொழில்களை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், செங்கல்பட்டு – முகையூர், பனையூர், விழுப்புரம் – மரக்காணம், கடலுார் – சிலம்பிமங்களம், நாகப்பட்டினம் – விழுந்தமாவடி, துாத்துக்குடி – மணப்பாடு, மயிலாடுதுறை – வானகிரி, கன்னியாகுமரி ஆகிய எட்டு இடங்களில் சிறு துறைமுகம் அமைக்க திமுக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நாட்டு படகுகள் மூலம் மீன்பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் மீனவ மக்கள்,  தங்களது கடல் பகுதி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் தங்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு  இத்திட்டத்தை உடனே  கைவிட வேண்டும் என அப்பகுதி  மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களுடைய எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை செயல்படுத்தினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்க பிரதிநிதிகளான, மணப்பாடு ஊர் நல கமிட்டி தலைவர் கிளேட்டன், வினோ உள்பட மீனவ மக்கள், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து பேச உள்ளதாகவும், இந்த துறைமுகம் வந்தால் மீனவ மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என தெரிவித்துள்ளனர். அவர்கள் பேசும் வீடியோ….

மணப்பாடு உள்பட 8 இடங்களில் சிறு துறைமுகங்கள்! தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு