டில்லி
தெற்கு டில்லிப் பகுதியில் ஒரு 18 நாள் குழந்தை பன்றியால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளது.
தெற்கு டில்லிப் பகுதியில் உள்ள ஃபதேபூர் பேரியில் சஞ்சய் காலனியில் வசித்து வருபவர் 29 வயதான ராஜ்பால். இவருக்கு பூஜா என்னும் மனைவியும் புஷ்பா என்னும் 18 நாட்களான பெண் குழந்தையும் உள்ளனர். பூஜா தனது குழந்தைக்கு வீட்டின் வாசலில் அமர்ந்து பால் கொடுத்துக் கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த பன்றி ஒன்று பூஜாவின் கையிலிருந்த குழந்தையை பிடுங்கிக் கொண்டு ஓடியது.
பன்றியை பின் தொடர்ந்து ஓடிய பூஜா கூச்சல் இட்டுள்ளார். அதைக் கேட்டு அருகில் உள்ளவர்கள் பன்றியைப் பின் தொடர்ந்து ஓடி குழந்தையை மீட்டனர். ஆனால் அதற்குள் குழந்தை பன்றியால் தாக்கப்பட்டு இறந்து விட்டது. இதைக் கண்ணீருடன் ராஜ்பால் தெரிவித்துள்ளார். அத்துடன் ஃபதேபூர் பேரி கிராமத்தில் பன்றிகள் சுமார் 10000க்கும் மேல் அலைவதாகவும், அடிக்கடி யாரையாவது தாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
ராஜ்பாலின் உறவினரான தரம்வீர் (வயது 36) என்னும் லாரி ஓட்டுனர் இது குறித்து, “இந்த இடத்தில் குப்பை கூளங்கள் நிறைந்துள்ளதால் தான் இங்கு பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறப்படும் சமயத்தில் இந்த பகுதியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.