மும்பை
மகாராஷ்டிர மாநில முதல்வரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசி உள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. அதில் இருந்தே பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் கடுமையாக நடந்து வருகிறது. இன்று மும்பையில் சிவசேனா கட்சி நிறுவனர் பால் தாக்கரேவின் 96 ஆம் பிறந்த நாள் விழா நடந்தது.
இதில் கலந்துக் கொண்ட சிவசேனா கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தனது உரையில், “பாஜகவுடன் கடந்த 25 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டோம். எங்களுக்கு அதற்கு ஈடாக எதுவும் கிடைக்கவில்லை. சிவசேனா இதனால் தனது 25 ஆண்டு கால அரசியல் பயணத்தை வீணடித்துவிட்டது.
இந்த இரு கட்சிகளும் மக்களவை தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப் பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தேர்தலிலும் ஒன்றாகவே பயணித்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலுக்குப் பின், இருகட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் கூட்டணி உடைந்தது.
எனவே பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற எதிர்க் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தோம். இதனால் நாங்கள் எங்களது சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டதாக பாஜக கூறி வருகிறது. தனது இந்துத்துவா நிலைப்பாட்டை சிவசேனா கைவிடவில்லை. நாங்கள் இந்தத்துவாவுக்காக ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பினோம், இந்துத்துவா மூலம் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
அதே வேளையில் பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தம் போலித்தனமானது. எங்களிடம் இந்தத்துவாவை விட்டு சிவசேனா வெளியேறிவிட்டதா? என்று கேட்பவர்களுக்கு, நாங்கள் தரும் பதில் என்னவென்றால், நாங்கள் பாஜகவை விட்டு மட்டுமே வெளியேறிவிட்டோம் என்றே கூற விரும்புகிறோம்’ என்று கூறினார்.