பால் தாக்கரேக்கு இணையாக சரத்பவாருக்கு சிவசேனா கவுரவம்..

சாட்டையடியாக விமர்சனம் செய்வதில்  சிவசேனாவின் கட்சி பத்திரிகையான ’சாம்னா’’வுக்கு இணை ’’சாம்னா’’ தான்.

கூட்டணி கட்சியாக இருந்தாலும், ஏதாவது அதிருப்தி ஏற்பட்டால்,  ’சாம்னா’, அதனைக் கடுமையாக  விமர்சிக்கத் தயங்காது.,

இந்த நிலையில், சிவசேனாவின் (தற்போதைய) கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  ’சாம்னா’ நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மூன்று பகுதிகளாக அந்த நேர்காணல் சாம்னாவில் இடம் பெறுகிறது.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே மற்றும் தற்போதைய தலைவர் உத்தவ் தாக்கரேயின்  பேட்டியை மட்டுமே, அந்த நாளிதழ் விரிவாக இதுவரை வெளியிட்டு வந்துள்ளது.

சிவசேனா தலைவர் அல்லாத ஒருவரின் மாரத்தான் பேட்டி ’சாம்னா’ வில் வெளிவருவது இதுவே முதன்முறை.

சரத்பவார் பேட்டியின் முதல் பகுதி சனிக்கிழமை இதழில் வெளியாகியுள்ளது.

சிவசேனாவை அந்த பேட்டியில் அவர் வானளாவ புகழ்ந்துள்ளார்.

‘’கடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதற்கு சிவசேனாவின் பங்களிப்பு முக்கிய காரணமாகும். சிவசேனா இல்லாவிட்டால், 40 -50 தொகுதிகளில் தான் பா.ஜ.க. ஜெயித்திருக்கும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, மகாராஷ்டிர முன்னாள் பா.ஜ.க. முதல்வர் பட்னாவிஸ்’’ மீண்டும் நான் ஆட்சிக்கு வருவேன்’ என்று கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள சரத்பவார்.’’ இவ்வாறு கூறியதால் தான் உங்களுக்கு ( பட்னாவிஸ்)  வாக்காளர்கள் பாடம் புகட்டினர்’’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

‘’ வாக்காளர்களைச் சாதாரணமாக எடை போட வேண்டாம். மக்கள் செல்வாக்கு மிக்க பெரிய தலைவர்களான இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகியோரே தேர்தலில் தோற்றுள்ளனர்’’ என்று அந்த பேட்டியில் சரத்பவார் சுட்டிக்காட்டியுள்ளார்.

-பா.பாரதி.