மும்பை

புதுச்சேரி அரசைக் கவிழ்த்ததற்கு மகாராஷ்டிர மாநில ஆளும் கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பல மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி அமைக்கும் போது அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்குத் தாவுவதும் இதனால் அம்மாநில அரசுகள் கவிழ்வதும் தொடர்கதையாகி வருகிறது.  அவ்வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.  அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் நடக்கும் சிவசேனா- காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரஸ் கூட்டணியைக் கலைக்க பாஜக திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி சிவசேனா பாஜகவுக்கு ஒரு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், “சமீபத்தில் புதுச்சேரி கனவு நிறைவேறியதால், இப்போது மகாராஷ்டிரா பக்கம் சிலரது பார்வை விழுந்துள்ளது. அவர்களின் கனவாக மட்டுமே அது இருக்க வேண்டும்   ஏனெனில் மகாராஷ்டிரா கூட்டணி மிகவும் வலுவானது மேலும் அதன் நோக்கங்கள் உறுதியானவை.

மகாராஷ்டிராவில் புதுச்சேரியில் நடத்திய விளையாட்டுக்கள் பலிக்காது.  சிலர் புதுச்சேரி முதல்வர் பதவியில் இருந்த நாராயணசாமியின் ஆட்சியை ஆதரித்த  ஐந்து தவளைகளைக் கொன்று, அவரது அரசைச் சிறுபான்மை அரசாக மாற்றினர். கடந்த நான்கரை ஆண்டுகளாக மேற்கண்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை ஆதரித்தனர்.

இப்போது இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாமரை நாடும் வண்டுகளாக மாறிவிட்டனர். அடுத்தபடியாக புதுச்சேரியில் பேரவை தேர்தல் முடிந்து புதிய அரசு அமைவதற்கு நான்கு மாதங்கள் வரை எடுக்கும். எனவே அதுவரை, புதுச்சேரியை பாஜக  அல்லது மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல் மார்ச் – ஏப்ரல் மாதத்தில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ மகாராஷ்டிராவில் நடக்கும் என்று சில பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.  முன்பு மத்தியப் பிரதேசத்தில்  காங்கிரஸ் அரசை வீழ்த்திய போது அடுத்த அடி மகாராஷ்டிரா மீது தான் என்றனர்.  அப்போது புதுச்சேரியில் ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் மகாராஷ்டிராவிலும் செய்தனர்.

நாராயணசாமியின் அரசைச் செயல்படப் புதுச்சேரி துணை ஆளுநர் கிரண் பேடி  அனுமதிக்கவில்லை.  மேலும் புதுச்சேரி ஒரு யூனியன்  பிரதேசமாக இருப்பதால், அதன் அதிகாரம் ஆளுநரின் கையில் உள்ளது.  ஆகவே முதல்வர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கிரண்பேடி எதிர்த்து டில்லியில் இருந்து வரும் உத்தரவின் அடிப்படையிலேயே அவர் செயல்பட்டார்.

ஒரு மாநிலத்தில் ஆளுநர் என்பவர் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலை போன்றவராகப் பார்க்கப்படுகிறார்.  அவ்வாறு கிரண் பேடியும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஒரு மாநில அரசின் மீதுள்ள எதிர்ப்பை வெளிப்படுத்த  மத்தியில் இருப்பவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவது துணிச்சலான விஷயம் என்று சிலர் நினைப்பது தவறு.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.