விருதுநகர்: பட்டாசு நகரமான சிவகாசியை, மாநகராட்சியாக்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பழனிசாமி, “விருதுநகர் வியாபார நகராகவும், சிவகாசி தொழில் நகரமாகவும் தற்போது விளங்கி வருகிறன்றன. குழந்தைகளின் இறப்பு விகிதம், பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2025க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தரமான மருத்துவக் கல்வி கிடைக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியை மாநகராட்சியாக்கும் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகாசியில் சாலைகள், பூங்காக்கள் என உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 5,976 இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகையாக ரூ.10.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்று ரூ.828 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்றார்.