பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘கனா’ படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

அதில், “இதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த முறை அதுவும் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ‘கனா’ என்ற படத்தைத் தயாரித்ததே, பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துதான்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் தனிப்பட்ட அணிக்கு சப்போர்ட் பண்ணுவதை விட, அனைத்துப் பெண்களுக்கும் சப்போர்ட் பண்ண வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக ஆஸ்திரேலியத் தூதரகம் இதற்காக பெரிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. #LedByWomen மற்றும் #LetsMakeHerstory ஆகிய இரண்டு வார்த்தைகளைப் படிக்கும் போதே உத்வேகம் அளிக்கிறது.

இந்தப் போட்டியில் விளையாடும் அனைத்துப் பெண்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என நம்புகிறேன்” என்று பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.