நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார்.

தவிர தனது மனைவி கமலா பெயரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார்.

இன்றைய விலையில் அவரது சொத்து மதிப்பு சுமார் 271 கோடி ரூபாய் இருக்கும் என்றும், அவரது மனைவி வைத்திருந்த 1000 சவரன் தங்க மற்றும் வைர நகைகளின் மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்றும் தெரிகிறது.

2001 ம் ஆண்டு சிவாஜி கணேசன் மறைந்ததை அடுத்து 2007 ம் ஆண்டில் அவரது மனைவி கமலா-வும் காலமானார்.

இந்த நிலையில், தந்தை மற்றும் தாயின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தனது சகோதரர்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரவில்லை என்று சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

2005 ம் ஆண்டு கொண்டுவந்த இந்து வாரிசு சொத்துரிமை அடிப்படையில் தங்களுக்கு உண்டான சொத்துக்களை சமமாக பிரித்து தரவுமாறு மனு செய்துள்ளனர்.

மேலும், சிவாஜி கணேசனின் சொத்து குறித்து உயில் எழுதிவைத்திருப்பதாக கூறுவது தவறு என்றும் அவர் அதுபோல் உயில் எதுவும் எழுதவில்லை என்றும் அது போலி உயில் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோபாலபுரத்தில் இருந்த வீட்டை பிரபு மற்றும் ராம்குமார் இருவரும் ரூ. 5 கோடிக்கு விற்றுள்ளதாகவும். ராயப்பேட்டையில் உள்ள 4 வீடுகளில் இருந்து வரும் வாடகையில் கூட தங்களுக்கு எந்த பங்கும் தருவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தவிர, பிரபு மற்றும் ராம்குமார் இருவரும் சிவாஜியின் சொத்துக்களை தங்கள் பெயரிலும் தங்கள் மகன்களின் பெயரிலும் எழுதியுள்ளதால் விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளனர்.