புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளதாகவும், அப்பகுதியின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி சீர்கெட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத்.
உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் 6 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுவந்த அவர், நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “அஙகே அனவைரும் அச்சத்தில் இருக்கிறார்கள். உள்ளூர் நிர்வாகத்தை மத்திய அரசு மிரட்டிக் கொண்டுள்ளது. மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். அப்பிராந்தியத்தில் வணிக நடவடிக்கைகள் கடந்த 2 மாதங்களாக முடங்கியுள்ளன.
காஷ்மீருக்கு தேவையான அனைத்தும் ஜம்முவிலிருந்துதான் போக வேண்டும். எனவே, காஷ்மீரில் கடைகள் மூடப்பட்டிருப்பதால், ஜம்முவின் வர்த்தகமும் முடங்கிவிட்டது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் பகுதி படைகளின் முற்றுகையில் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் எதுவுமே சரியில்லை. ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கே அங்கு நிலவும் சூழலில் விருப்பமில்லை. ஆனால், தங்களின் தலைமைக்குப் பயந்து அவர்கள் பேசாமல் இருக்கின்றனர்” என்றார்.