சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணி தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக வார் ரூம் அமைக்கப்படுவதாக மாநில தலைவர்  செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், கடந்த ஆண்டு (2024) சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களின்போது,   வார் ரூம் அமைக்கப்பட்டது. க  தேசிய வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில்  நியமிக்கப்பட்டதுடன், அந்த மாநிலங்களுக்க வார்ரூம் தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி,  வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (SIR) பணிகள் தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக வார்ரூம் அமைக்கப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வாக்காளர் திருத்த விவகாரத்தில் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டும் போதாது, நீங்கள் சேர்ப்பதற்காக கொடுத்த பெயரை நீக்கி விடவும் வாய்ப்பு உள்ளது. மக்களின் வாக்குரிமையை பறிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களே கவனமாக இருங்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் மாவட்டம் வாரியாக ‘வார் ரூம்’ அமைக்கப்படும். சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் தனியாக ‘வார் ரூம்’ அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், விஜயன், பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, டி.என்.அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.