சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பழைய 2002/2005  விவரங்கள் தேடுவதில் சிக்கல் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில், அதற்கான  வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பும் வாக்காளர்களின் வசதிக்காக, 2002 மற்றும் 2005-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களைத் தேடும் புதிய ஆன்லைன் வசதியை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ளது. அதன்படி,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (Special Summary Revision – SIR) கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பும் வாக்காளர்களின் வசதிக்காக, 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களைத் தேடும் வழிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பழைய வாக்காளர் விவரங்களைத் தேடுவது எப்படி?

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வாக்காளர்கள் தங்களது முந்தைய தீவிர திருத்தம் (SIR) விவரங்களை எளிதாகக் கண்டறியும் வகையில், தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு அணுகக்கூடிய வகையில் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

இணையதளம்: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.voters.eci.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லவும். முகப்பு பக்கத்தில் உள்ள “Search your name in the last SIR” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் தமிழ்நாடு மாநிலத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

“தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில்” “பெயர் மூலம் தேடுதல்” அல்லது “EPIC எண் மூலம் தேடுதல்” என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி உங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம்.

“பெயர் மூலம் தேடுதல்” விருப்பத்தைத் தேர்வு செய்தால், மாவட்டத்தின் பெயர், சட்டமன்றத் தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு (Captcha) ஆகியவற்றை உள்ளீடு செய்து விவரங்களைப் பெறலாம்.

ஆன்லைனில் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பும் வழிகாட்டுதல்கள்

வாக்காளர்களின் வசதிக்காக, அதே https://voters.eci.gov.in இணையதளத்தில் கணக்கீட்டுப் படிவத்தை (Enumeration Form) ஆன்லைனில் நிரப்புவதற்கான வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வசதியினை, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரும், ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். வாக்காளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையலாம். பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டு உள்நுழைந்த பிறகு, “Fill Enumeration Form” என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.

படிவம் சமர்ப்பிப்பு:

வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, இணையப் பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை வாக்காளர் நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, பக்கம் e-sign பக்கத்திற்கு மாறும். மீண்டும் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாகப் பதிவேற்றப் படும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம், தங்களது கைபேசி எண்களைப் பதிவு செய்துள்ள, மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.