சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐர் எனப்படும்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி  தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

எஸ்ஐஆர்-க்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக, பாமக போன்ற கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இன்று மாலை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தகூட்டத்தில், பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  இன்று மாலை 4 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ  உள்பட பல கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ந்தேதி முதல்  இந்த பணிகள் தொடங்குகிறது. இந்த பணியில் ஈடுபட  . தமிழகத்தில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பயிற்சி பெற்ற  வாக்குச்சாவடி அலுவலர்கள் 3 முறை வீடு தேடி வருவார்கள். அப்போது, பொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று உறுதி செய்யப்படும். இந்த பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளது. இவை முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர், அதன் மீதான சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக, தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில்  புதிய வாக்காளர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்ட அன்றைய  இரவு 12 மணியில் இருந்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் வாக்காளர் பட்டியலில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது.

டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பிறகே திருத்தம் செய்ய முடியும். ஜனவரி 31ம் தேதி வரை திருத்தம், சரிபார்த்தல் பணி நடைபெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும்.