சென்னை: பல்வேறு சூழல் காரணமா கணவனை இழந்தோ, விவாகரத்து செய்தோ மற்றும் பல காரணங்களால் தனியாக வசிக்கும் பெண்களும் குடும்பமாக கருதப்பட்டு, அவர்களுக்கு தனி ரேசன் கார்டு வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் உள்பட பெண்கள் அமைப்புகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன.
கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று, நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், தனியாக வசிக்கும் பெண்கள் குடும்ப அட்டை பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் பல பெண்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்பெண்மணிகளின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது.
‘ஏற்கனவே உள்ள விதிகளின்படி, திருமணமான பெண் குழந்தைகளுடன் அல்லது தன்னைச் சார்ந்தவர்களுடன் தனியாக வசித்தால், அவர் விவாகரத்து செய்யாத வரை ரேஷன் கார்டுக்கு தகுதியற்றவர். பெயரை நீக்க, விவாகரத்து வழங்கும் நீதிமன்ற உத்தரவின் நகல் தேவை என்றும், அதுபோல திருமணமாகாத ஒற்றைப் பெண்கள் “எப்போதும் பெற்றோருடன் வாழ்வதால்” அவர்கள் ‘குடும்பமாக’ கருதப்படுவதில்லை என இருந்தது. அதைத்தொடர்ந்து தனியாக வசிக்கும் பெண்களின் வறுமையை போக்கும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,
● தனியாக வசிக்கும் ஒரு பெண் குடும்ப ரேஷன் கார்டுகளுக்கு தகுதியானவர்
ஒற்றைப் பெண்களுக்கு ரேஷன் கார்டு பெறுவதற்கான அளவுகோல்கள்
● பெண்களுக்கு எரிவாயு இணைப்பு (முன்னுரிமை) அல்லது சமையல் வசதியுடன் கூடிய சமையலறை இருக்க வேண்டும்.
● தனியாக இருப்பதற்கான எழுத்துப்பூர்வ சுய அறிவிப்பு
● வீடு வருவாய் ஆய்வாளரால் தணிக்கை செய்யப்படும்
● ஆதார் மற்றும் சிலிண்டர் பெறுவதற்கான சான்று போன்றவை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளத.
இதுதொடர்பாக தமிழக அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்மந்தப்பட்ட பெண் மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அவர்களிடம் எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்று, சம்மந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பினை பயன்படுத்தி, குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப அட்டையிலிருந்து நீக்கலாம்.
தனியாக வாழும் சம்மந்தப்பட்ட பெண்மணிகள் புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘தமிழகஅரசின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து உள்ளது. தனியா வசிக்கும் பெண்களுக்கு தனி ரேஷன் கார்டு கோரி போராடி வரும் அமைப்புகளில் ஒன்றான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) இந்த முடிவை முற்போக்கானது என்று பாராட்டியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, AIDWA-வின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள ஒற்றைப் பெண்கள், ரேஷன் கார்டுகள் இல்லாததால் பொங்கல் மற்றும் லாக்டவுன் காலத்தில் வழங்கப்படும் சலுகைகளைப் பெற முடியவில்லை. “உணவுப் பாதுகாப்பைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், அரசாங்கம் வழங்கும் அனைத்து சலுகைகளும் தேவைப்படும் மக்களுக்குச் சென்றடைவதை இந்த முடிவு உறுதி செய்யும்” என்று கூறினார்.
இதே கருத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கமும் வழிமொழிந்துள்ளார். ‘ஒரு குடும்பத்துக்கு ஒரே ரேஷன் கார்டு’ என்று சொல்வதில் பகுத்தறிவு இல்லை என்றார். “திருமணமான தம்பதிகள் ஒன்றாக வாழ வேண்டும் என்று எந்த திருமணச் சட்டமும் இல்லை. நாம் எப்போதும் ஆணாதிக்கத் தால் வழிநடத்தப்படுகிறோம். கணவன் குடும்பத்தில் பெண்கள் வாழ்வது வழக்கம். விரிசல் இல்லாவிட்டாலும், பணிபுரியும் வாழ்க்கைத் துணைவர்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் தங்கியிருக்கலாம், ”என்று அவர் கூறினார்.