சென்னை: அடுத்த கல்வியாண்டிலிருந்து தமிழகத்தின் கலை – அறிவியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் மாணாக்கர் சேர்க்கை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும், மாநிலத்திலுள்ள கலை – அறிவியல் பல்கலைக்கழகங்களுக்கும் இதே நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பொறியியல் கல்லூரிகளுக்குப் பின்பற்றப்படும் நடைமுறையே கலை – அறிவியல் கல்லூரிகளுக்கும் பின்பற்றப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நடைமுறையின் மூலமாக, ஒரு மாணாக்கர் ஒரே விண்ணப்பத்தின் மூலம் மாநிலத்திலுள்ள எந்தக் கல்லூரியிலும் சேரலாம் என்ற நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

அதேசமயம், இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வருவதிலும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டம் 1976ல் திருத்தம் கொண்டுவராமல் இதை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஏனெனில், இந்தச் சட்டப்படி, ஒரு தனியார் கல்லூரியின் சேர்க்கை விதிமுறைக்குள் அரசு தலையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அரசு தரப்பில் இதுதொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.