எமபயம் போக்கும் சிங்கவரம் பெருமாள்!
மனிதர்களாகப் பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில சமயங்களில் இருட்டு, அமானுசியம் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில் இருந்து ஒரு சில மனமாறுபாடுதல்கள், உளவியல் ரீதியாக வெளியேறிவிடாம். ஆனால் நமக்கு ஏற்படும் மரண பயத்தை எளிதில் போக்க முடியாது.
குறிப்பாக, எமதர்மன் தொடர்வதைப் போலவும், கனவில் அழைத்துச் செல்வதைப் போலவும் தொடர்ந்து ஏதேனும் அறிகுறிகள் நம் கண் முன் தோன்றிக் கொண்டே இருக்கும். இது பலசமயங்களில் நம் ஆழ்மனதில் தேங்கி அவ்வப்போது நம்மை வேதனையுடைய செய்யும். அவ்வாறான எமபயத்தில் இருந்து விலக வேண்டுமா..? உடனே இந்த பெருமாள் கோவிலுக்குச் செல்லுங்கள்.
எங்கே உள்ளது ?
விழுப்புரத்தில் இருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில் செஞ்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோவில். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 38யில் பயணித்தால் தும்பூர், சிட்டம்பூண்டி, செஞ்சிக் கோட்டை உள்ளிட்டவற்றைக் கடந்து மேலச்சேரிக்கு முன்னதாக இக்கோவிலை அடையலாம். பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார் வசதிகளும் அதிகளவில் உள்ளன.
சிறப்பு
குடைவரைக் கோவிலான சிங்கவரம் பெருமாள் கோவிலில் சுமார் 14 அடி நீளத்தில் பெருமாள் வீற்றுள்ளார். கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முகப்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
திருவிழா
பெருமாளுக்கு உகந்த நாட்களான மாசி மகம், தை, அமாவாசை, ஆடி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மங்கல மேளம் முழங்கப் பூஜைகள் நடைபெறுகின்றன. இதனை தரிசிக்கவே விழாக்காலங்களில் கோவிலில் பக்தர்கள் கூடுவர்.
நடைதிறப்பு
அருள்மிகு சிங்கவரம் பெருமாள் கோவில் நடை காலை 8 மணி முதல் 10 மணி வரைவிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். பிற கோவில்களை ஒப்பிடுகையில் இது குறைவான நேரம் என்பதால் முறையாகத் திட்டமிட்டுச் செல்ல வேண்டும்.
வழிபாடு
சுமார் 14 அடி நீளமுள்ள சிங்கவரம் பெருமாளைத் தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக மனதை உலுக்கிவந்த எமபயம் நீங்கும் என்பது தொன்நம்ப்பிக்கை. பெருமாளின் பாதம் தொட்டு வணங்கிவர வறுமை நீங்கி செல்வம் பெருகும். திருத்தலம் அமைந்துள்ள மலைக்கு மேலே செல்லும் வழியில் லட்சுமி துர்த்தம் என்னும் சுனையும், அதனருகே லட்சுமிக் கோவிலும் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி, லட்சுமி அம்மையாரை வழிபட்டால் தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கி இலாபம் பெருகும். பில்லி, சூனியம், கண் திருஷ்டி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இங்கே தீர்வுகள் கிடைக்கும்.
எமபயம் போக்கும் பெருமாள்
இத்திருத்தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசனம் செய்பவர்களுக்கு எமனின் மீது இருந்த பயம் விலகும். தொடர்ந்து, வாரந்தோறும் புதன் கிழமைகளில் இக்கோவிலில் விளக்கேற்றி வழிபட்டால் மரண பயம் நீங்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் புதன் கிழமையன்று வருவர்.
நேர்த்திக்கடன்
வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, அபிஷேக அலங்காரம் செய்து அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
புராணக்கதை
செஞ்சிப் பகுதியை ஆட்சி செய்து வந்த தேசிங்கு ராஜாவின் குலதெய்வமாக இந்த சிங்கவரம் பெருமாள் இருந்தார். தேசிங்கு ஆற்காடு நவாப்புடன் போருக்குச் செல்லுகையில் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டார். தேசிங்கு ராஜா போருக்கு செல்வதை விரும்பாத பெருமாள் தனது முகத்தை திருப்பிக் கொண்டார். இன்றளவும் இக்கோவிலில் உள்ள பெருமாளின் திருவுருவ சிலையின் தலை திரும்பியே இருப்பதைக் காணமுடியும்.
தல சிறப்புகள்
செஞ்சி மலையில் குடைவரைக் கோவிலான இதன் கீழே பாறையை ஒட்டி ரங்கநாயகி அம்மையாரும், பாறையின் புடைப்பில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்குச் செல்லும் வழியில் படிக்கட்டின் துவக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமாளுக்கு உகந்த சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம் மற்றும் பஞ்சமுக அனுமனின் உருவம் சிற்பங்களாக உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் லட்சுமி தீர்த்த சுனையும், லட்சுமி அம்மையார்க்குச் சன்னதியும் அமைந்துள்ளது.