டெல்லி: ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி னார். இதையடுத்து அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இந்திய ராணுவம் கொடுத்த சிந்தூர் ஆபரேசன் பதிலடி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் பாகிஸ்தான் எதிர்பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், அதை முறியடிக்க, இந்திய அரசு, அனைத்துகட்சிகளின் எம்.பி.க்கள் கொண்ட 7 குழு அமைத்து, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 7 பேரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து 3 பேரும் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி.கனிமொழி, அசாதுன் ஒசைசி உள்பட பல எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் பொறுப்பேற்றனர். இதை காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆனால், நாடு விஷயத்தில் வேறுபாடு கிடையாது அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்ற நோக்கில், இந்த 7 குழு அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து, நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் தேசிய ஒருமித்த கருத்தையும் உறுதியான அணுகுமுறையையும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் முன்வைக்கும். தீவிரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை அவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்வார்கள். அரசியல் பிளவுகளைக் கடந்து அனைத்து கட்சிகளிலிருந்தும், வெளிப்படையான குரல்களாகக் கருதப்படும் பிரதிநிதிகளையும் அவர்களை வழிநடத்தும் தலைவர்களையும் அரசு கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பதிவில், ‘‘மிக முக்கியமான தருணத்தில் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. தீவிரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நமது கொள்கையை எடுத்துச் செல்லும் வகையில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்கள் விரைவில் முக்கிய நட்பு நாடுகளுக்குச் செல்ல உள்ளனர். இக்குழுக்கள், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, அரசியலுக்கு அப்பாற்பட்ட தேசிய ஒற்றுமையின் சக்திவாய்ந்த பிரதிபலிப்பு’’ என்று கூறியிருந்தது.

இதுகுறித்து கூறிய காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் தனது எக்ஸ் பதிவில், ‘‘அனைத்து கட்சி குழுவின் தலைமைப் பொறுப்பை வழங்கியதன் மூலம் கவுரப்படுத்தப்பட்டு உள்ளேன். தேசிய நலன் சார்ந்த விஷயத்தில், எனது சேவைகள் தேவைப்படும்போது, கண்டிப்பாக அதை சிறப்பாக செய்வேன். ஜெய்ஹிந்த்’’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைமையிலான ஏழு பிரதிநிதிகள் குழுக்கள், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க 33 வெளிநாட்டுத் தலைநகரங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சென்றன. சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ, சியரா லியோன், அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ரஷ்யா, எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கு இந்தக் குழுக்கள் சென்றன.
அங்கு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அந்நாட்டு தலைவர்களிடம் விளக்கினர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதிலும், அவற்றை இந்தியாவிற்கு எதிரான ஒரு மூலோபாய கருவியாகப் பயன்படுத்துவதிலும் பாகிஸ்தானின் பங்கையும் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். இந்த நிலையில், பயணத்தை முடித்த எம்.பி.க்கள் குழுவினர் டெல்லி திரும்பினர். டெல்லி திரும்பிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி, குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், “பல்வேறு நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்து, அமைதிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை விரிவாகக் கூறினார். அவர்கள் இந்தியாவின் குரலை முன்வைத்த விதத்தில் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம் என்றார். பின்னர் அனைவருடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.