கீழடி: அகழாய்வில் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. இதைகக்கண்ட தொல்லியல்துறை ஆய்வாளர்கள் வியப்படைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில், முதல்முதலாக  மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிடைத்த அரிய தகவல்கள் மூலம், மேலும் அகழ்வாய்கள் தொடரப்பட்டு வருகின்றன. தற்போது 7வது கட்ட அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அறிவுத்திறனையும்  உலகுக்கு பறைசாற்றும் வகையில் கீழடி அகழ்வாய்வுகளில் கிடைக்கப்பெற்ற அரிய பொருட்களும், ஆதாரங்களும் உள்ளன.

தற்போது நடைபெற்று வரம் 7வது கட்ட அகழ்வாய்வு, திருப்புவனம் அருகே கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில்  நடைபெற்று வருகின்றன.  இந்த ஆய்வில் கீழடியில் 7, அகரத்தில் 8, கொந்தகையில் 5, மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள், உறைகிணறுகள், மூன்று கல் வரிசை கொண்ட சுடுமண் செங்கல்சுவர், மூடியுடன் கூடிய பானைகள், பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், உணவு குவளை, தங்கத்தால் ஆன பொருள்  உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது, சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாணயத்தின் இரு புறமும் சூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொல்லியல்துறை அகழ்வாய்வாளர்கள், ‘‘கீழடியில் கண்டறியப்பட்ட நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. இது முத்திரை நாணயம் போன்று பயன்பட்டிருக்க வேண்டும். இது கிமு 2 முதல் 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். எனினும் நாணயத்தின் பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறிய ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்து உள்ளனர்.