சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில்
தலவரலாறு
விண்ணுலகத்திலிருந்த காமதேனு பசு, பஞ்ச காலத்தில் மாமிசம் தின்று விட்டது, இதை அறிந்த சிவன், பசுவை புலியாக மாறும் படி சபித்தார். வருந்திய புலி இறைவனிடம் மன்னிப்பு கேட்டது. மனமிறங்கிய சிவன், ”பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள இறைவனை பூஜித்தால் சாபம் விலகும்” என்றார். சிவனின் அறிவுரைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து நீராடிய போது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது.
இதனால் இந்த குளம் பாற்குளம் ஆனது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது. சிவனின் ஆணைப்படி வசிட்டர் இத்தலம் வந்து, இந்த வெண்ணெய் மூலம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் இத்தல இறைவன் “வெண்ணெய் நாதர்” ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் “சிக்கல்” என்றழைக்கப்பட்டது.
கந்தசஷ்டி திருநாளின் முதல் நாள் முருகன் இத்தல அம்மனிடமிருந்து வேல் வாங்கியதாக கூ
றப்படுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு வேல்நெடுங்கண்ணி என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிங்காரவேலர் , வேல் வாங்கி வீராவேசத்துடன் வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத்துளிகள் உண்டாவதை சஷ்டி காலத்தில் இன்றும் காணலாம்.
ஆலய அமைப்பு
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த ஆலயம். ராஜகோபுரத்திற்கு முன்னால் சுதை சிற்பம் நிறைந்த வாயிலுடன் பெரிய மண்டபம் ஒன்று காணப்படுகிறது. அதனை அடுத்து முன் மண்டபம் ஒன்றும் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபாணியும் காட்சி தருகின்றனர்.
இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் சன்னதி உள்ளது. படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதி சன்னதி உள்ளது. இவரை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும். மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது.
மூலவர் வெண்ணைப் பிராண் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கட்டுமலையின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது.
மேலும் பிரகாரத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீகார்த்திகை விநாயகர், ஸ்ரீஆறுமுகருக்கான தனிக்கோயில், ஸ்ரீபைரவர், அறுபத்து மூவர் சன்னதிகளும் உள்ளன. வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.
அமைவிடம்
நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் தலம் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகிலேயே ஆலயம் உள்ளது.
இவ்வாலயம் தினமும் காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சிறப்புக்கள்
கந்தசஷ்டி திருநாளின் சிங்காரவேலர் வேல் வாங்கி வரும் சமயத்தில் அவர் திருமேனியில் வியர்வைத் துளிகள் உண்டாகும் அதிசயம்.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.
விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட ஆலயம். சிங்காரவேலருக்கு “சத்ரு சம்ஹார திரி சதை” அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும்.
மூலவரும் உற்சவரும் ஒருவரே.
அம்மனின் சக்திபீடங்களில் இதுவும் ஒன்று.
எட்டுக்குடி, எண்கண், ஆகிய தலங்களில் உள்ள முருகப்பெருமான் மூர்த்திகளை உருவாக்கிய சிற்பி இவ்வாலய சிலையை செதுக்கவில்லை. அந்த சிலை 1 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரியில் உள்ளது.
சைவமும் வைணவமும் இணைந்த ஓர் ஆலயம்.