டெக்னாஃப்

சீக்கியர்கள் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் தினமும் 35000 ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவு அளித்து வருகின்றனர்.

மியான்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையினால் பல ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.   அவர்களுக்கு உதவ சீக்கிய தன்னார்வுத் தொண்டு நிறுவனமான கல்சா எய்ட் பெருமளவில் தொண்டுகள் செய்து வருகின்றது.  ஒரு குரு கா லங்கர் என அழைக்கப்படும் சமுதாய சமையல் அறையை உருவாக்கி, அதன் மூலம் உணவு சமைத்து அகதிகளுக்கு அளித்து வருகின்றனர்.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அமர்பிரீத் சிங், “ இன்று முதல் நாங்கள் சமுதாய சமையல் அறை மூலம் உணவு தயாரித்து அகதிகளுக்கு அளிக்கத் துவங்கி உள்ளோம்.  இதற்கு தேவையான அரிசி, காய்கறிகள்,  மற்றும் பெரிய சமையல் பாத்திரங்களை நேற்று வாங்கினோம்.   வங்க அரசின் அனுமதி எங்களுக்கு நேற்றுத்தான் கிடைத்தது.  ஒரு நாளைக்கு 35000 பேருக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளோம்.

இங்கு இருக்கும் அகதிகள் சுமார் 3 லட்சம் என தெரிய வருகிறது.  எனவே நாங்கள் உணவளிக்கும் போது நிச்சயம் நெரிசல் அதிகமாக இருக்கும் என பயந்தோம்.  ஆனால் அதற்காக உணவளிக்காமல் இருக்க முடியாது என்பதற்காக ஆரம்பித்து விட்டோம்.  குழந்தைகள் உணவின்றி சாலைகளில் பிச்சை எடுக்கும் நிலையைக் கண்டு எங்களுக்கு மனம் தாளவில்லை.  இன்று காலை நாங்கள் சாதமும், காய்கறிக் குழம்பும் அளித்திருக்கிறோம்.

இந்த சமுதாய சமையல் அறை அமைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.  நாங்கள் வங்க தேச அனுமதி கிடைத்த உடன் பெரிய சமையல் பாத்திரங்களை வாங்கச் சென்ற போது நாங்கள் வெளிநாட்டவர் என்பதால் விலையை மிக மிக உயர்த்தி விட்டனர். உள்ளூர் மக்கள் சிலர் எங்களுக்கு சரியான விலையில் வாங்க உதவி செய்தனர்.  அது மட்டுமின்றி இந்த அகதிகளுக்கு உள்ளூர் மக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவிப்பது பரிதாப கரமானது.   என்னிடம் சிலர் இது தங்கள் நாட்டுக்கு தேவையற்ற சுமை என்றனர்.   அதே நேரத்தில் சிலர் அகதிகளுக்கு உதவி செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.