சென்னை மெட்ரோ ரயில் Phase 2 மூன்றாவது வழித்தடம் அமைக்கும் பணியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்.

சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையில் மெட்ரோ ரயில் முதலாவது வழித்தடமும் சென்ட்ரல் முதல் ஆலந்தூர் (மவுண்ட்) வரை மெட்ரோ ரயில் இரண்டாவது வழித்தடமும் இயங்கி வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் Phase 2-வில் மாதவரம் மில்க் காலனி முதல் சிறுசேரி வரை 45.4 கி.மீ. தூரத்துக்கு மூன்றாவது வழித்தடம் அமைக்கப்படுகிறது.

நான்காவது வழித்தடம் பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரை 26.1 கி. மீ தூரம் அமைக்கப்படுகிறது.

தவிர, மாதவரம் மில்க் காலனி முதல் கோயம்பேடு, போரூர், ஆலந்தூர், வேளச்சேரி வழியாக சோழிங்கநல்லூர் வரை 44.6 தூரம் அமைக்கப்படுகிறது.

இதில் இரண்டாவது வழித்தடத்தில் ஏற்கனவே உள்ள கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் வழித்தடம் 4 மற்றும் 5ன் முக்கிய சந்திப்புகளாக விளங்கும்.

தவிர மைலாப்பூரில் புதிதாக அமையவுள்ள மெட்ரோ ரயில் நிலையம் தொழில்நுட்ப ரீதியாக பிரம்மாண்டமான ரயில் சந்திப்பாக விளங்கும்.

அந்த வகையில் தற்போது வழித்தடம் மூன்றில் அயனாவரம் – ஓட்டேரி இடையே ரயில் பாதைக்கான மண் தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடத்தில் ஏற்கனவே 9 கி. மீ. தூரத்திற்கு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அயனாவரம் ஓட்டேரி இடையிலான துளையிடும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

7 துளையிடும் கருவிகள் இந்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் கடைசியாக ஓட்டேரி பகுதியில் தனது பணியை நிறைவு செய்த துளையிடும் இயந்திரம் வெளியே வந்தது.

https://x.com/cmrlofficial/status/1829396883732594836

நெருக்கடியான குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் 500 மீட்டர் மிகவும் சவாலானதாக இருந்ததாக தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்தப் பகுதி 220 மீட்டர் ஆரம் கொண்ட வளைவான பாதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், 200 மீட்டர் தூரத்துக்கு 280 மீட்டர் ஆரம் கொண்ட மற்றொரு வளைவான பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியில் இருந்து ஆழ்துளை போர்கள் மக்களின் தண்ணீர் தேவைக்கு தடையின்றி மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது