மாசிமகம் இன்று கொண்டாடப் படுகிறது.     மாசி மாதம் என்றாலே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம் ஆகும்.   மகம் நட்சத்திரத்துக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு.   ஜோதிடப்படி மகத்தில் பிறந்தோர் ஜகத்தை ஆள்வார்கள் எனக் கூறுவார்கள்.   அதற்குக் காரணம் பார்வதி தேவி தட்சன் மகள் தாட்சாயணியாக அவதாரம் எடுத்தது ஒரு மாசி மகம் அன்றே ஆகும்.

பூவுலகை கட்டி ஆண்ட தட்சன் தனக்கு மகளாக பார்வதி தேவி பிறக்க வேண்டும் என சிவனை நோக்கி தவம் இருந்தார்.   சிவன் அளித்த வரத்தின் படி பார்வதி தேவி ஒரு மாசி மகத்தன்று தட்சனுக்கு மகளாக பிறந்து தாட்சாயணி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தார்.  அந்தப் பெண்ணை சிவனுக்கே தட்சன் மணம் முடித்துக் கொடுத்தார்.   சிவன் தனது மருமகன் ஆனதால் ஆணவமுற்ற தட்சன் சிவனுக்கு மதிப்புத் தராமல் ஒரு யாகத்தை தொடங்கினார்.   அதை தாட்சாயணி தட்டிக் கேட்க அவரையும் அவமதித்தார்.   அதனால் சிவன் தட்சனை அழித்தார்.  தாட்சாயணி அவதரித்த தினம் என்பதால் சிவன் கோவிலில் அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

வருண பகவானுக்கு ஒரு முறை பிரம்ம ஹத்தி தோஷம் ஏபட்டதால் அவர் கடலுக்குள் கட்டுண்டு கிடந்தார்.    மழைக்கடவுளான வருணன் கட்டுப்பட்டு இருந்ததால் மழை பெய்யாமல் மிகவும் பஞ்சம் ஏற்பட்டது.   கடலில் முழுகி இருந்த வருணன் அங்கிருந்தே கடல் முழுக்காடி தன்னை விடுவிக்க வேண்டினார்.   சிவனும் மாசி மகத்தன்று அவரை விடுவித்து உலகப் பஞ்சத்தை நீக்கினார்.  அப்போது தனக்கு கடல் நீராடியதால் தோஷம் நீங்கியதைப் போல் அதே மாசி மக தினத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோர்களின்,  பாவ வினைகள், தோஷங்களை நீக்க வேண்டும் என சிவனிடம் வருணன் கேட்டுக் கொண்டார்.   சிவனும் அந்த வரத்தை அருளினார்.

இதனால் மாசி மகத்தன்று புனித நீராடி இறைவனை வணங்குவோருக்கு சகல நன்மைகளும் நிகழும் என புராணங்கள் தெரிவிக்கின்றன.