ண்டிகர்

டந்த 1999 ஆம் வருடம் கந்தகாரில் தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்தது யார் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பு ஏற்றுக் கொண்டது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக உலக நாடுகள் பாகிஸ்தானை குற்றம் சாட்டியது. மேலும் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தை சேர்ந்த மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை உலகத் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பஞ்சாப் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினருமான நவஜோத் சிங் சித்து அம்மாநில அமைச்சராகவும் உள்ளார். இந்த தாக்குதல் குறித்து சித்து தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு சிலர் செய்யும் குற்றங்களுக்காக நாட்டையே குற்றம் சாட்டலாமா என்னும் விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலை தளங்களில் சித்துவை எதிர்த்தும் கடுமையாக விமர்சித்தும் பலர் கருத்து பதிந்தனர். அத்துடன் அவர் கலந்துக் கொண்டிருந்த சோனி டிவியில் நிகழ்வு ஒன்றில் இருந்தும் ரசிகர்கள் எதிர்ப்பால் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் நடிகை அர்ச்சனா பூரன் சிங் அந்நிகழ்வில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சித்து செய்தியாளர்களிடம், “என்னுடைய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் எப்போதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அதே நேரத்தில் கடந்த 1999 ஆம் வருடம் கந்தகார் விமான கடத்தலின் போது மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? டில்லியில் இருந்து சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நூற்றுக் கணக்கான பயணிகளுடன் கடத்தப்பட்ட போது அப்போதைய வாஜ்பாய் அரசு முன்று தீவிரவாதிகளை விடுதலை செய்தது.

அதில் ஒருவன் இந்த மசூத் அசார்.   இதற்கு யார் காரணம்? எங்களின் போராட்டமும் அவர்களுக்கு எதிராகத் தான் உள்ளது. ஒரு வீரர் கூட எதற்கு உயிர் இழக்க வேண்டும்? இதுவரை ஏன் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியவில்லை?” என சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.