பெங்களூரு: கடவுளின் பெயரை கொண்டு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாஜக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: ராமர் கோயில் கட்டுமானத்தை பாஜக அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது.  கடவுளின் பெயரில் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி பாஜக விளையாடுகிறது. ராமர் கோயில் நன்கொடை கணக்குகளை வழங்குவது அறக்கட்டளையின் கடமையாகும்.

தணிக்கை மற்றும் கணக்குகளை கேட்பதில் என்ன தவறு? நாங்கள் எங்கள் கிராமத்தில் ஒரு ராமர் கோயிலை கட்டி வருகிறோம். எங்களுக்கும் கூட கடவுள் நம்பிக்கை இருக்கிறது.

எங்களது நம்பிக்கைகள் எங்களின் தனிப்பட்ட பிரச்னை. அதனை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது. பாஜக தலைவர்கள் ராமர் கோயில் கட்டுவதை தங்கள் அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றார்.