மைசூர்:

ர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மைசூர் மாவட்டம், சாமுண்டீஸ்வரி தொகுதியிலிருந்து போட்டியிடப்போவதாக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தேர்வு பணி ஜரூராக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் மைசூரு வந்திருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, சட்டமன்ற தேர்தலில் மைசூரில் உள்ள சாமூண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறி னார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாமூண்டீஸ்வரி தொகுதியில் நான் இதுவரை 7 முறை போட்டியிட்டுள்ளேன். அதில்  5 முறை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்தமுறையும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவது நிச்சயம் என்றும் கூறினார்.

2006ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் கடும் நெருக்கடிக்கு நடுவே, இதே தொகுதியில், மக்கள் ஆதரவுடன் நான் வெற்றிபெற்றேன் என்றார்.

ஆனால், 2006 இடைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் வெறும் 257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதையடுத்து  2008ம் ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதின் காரணமாக தனது தொகுதியை மாற்றிய மைசூரில் வருணா தொகுதியிலிருந்து  போட்டியிட தொடங்கினார்.

இந்த நிலையில்,  தற்போது மீண்டும் அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆனால், இந்த தொகுதியில் சித்தராமையா தோற்பது உறுதி என மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி கூறி வருகிறார்.

ஏற்கனவே  கடந்த சட்டசபை தேர்தலின்போது, இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என கூறியவர் சித்தராமையா என்பது  குறிப்பிடத்தக்கது.