பெங்களூரு:
முதலமைச்சர் சித்தராமையா கூறியதால்தான், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் ஜாலியாக இருந்தாகவும், தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், தனி சமையல் அறை ஒதுக்கப்பட்டு விரும்பியதை சமைத்து சாப்பிட்டதாகவும், அவ்வப்போது சிறை விதிகளை மீறி சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாகவும் புகார் கூறப்பட்டது.
சிறைத்துறை டிஐஜி ரூபாவின் அதிரடி சோதனையின்போது இந்த குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதாக ரூபா அரசுக்கு அளித்த அறிக்கை மற்றும் வீடியோ பதிவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க, அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.
இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்த சத்தியநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஓய்வுபெற்றார்.
அதைத்தொடர்ந்து ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, முன்னாள் சிறைத்துறை டிஐஜி உள்பட பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை சூப்பிரண்டு மற்றும் சூப்பிரண்டாக இருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், 2 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் டிஜிபி சத்திய நாராயணா கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநில முதல்வர் சித்தராமையா கூறியதால்தான் சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கினேன் என்று தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கர்நாட அமைச்சர் ஒருவர் சிறையை பார்வையிட்டபோது, சசிகலாவிடம் உரையாடியது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது கர்நாடக முதல்வர் மீது சத்தியநாராயண ராவ் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.
கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு கர்நாடக மாநில முதல்வர் உதவியுள்ளதாக வெளியான தகவல் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கல் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கம் என கூறப்படுகிறது.