தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று நேற்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூகவலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து தனது பதிவை எச்.ராஜா நீக்கினார். ஆனாலும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இந்த நிலையில் இன்று, “அந்தப் பதிவை எனது அனுமதி இன்றி அட்மின் பதிவேற்றிவிட்டார். இதனால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என்று எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில், “முத்துராமலிங்கத்தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பலர் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“முத்துராமலிங்கத்தேவர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர். பெரியாருக்கும் முத்துராமலிங்கத்தேவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் முத்துராமலிங்கத்தேவர்   எச்.ராஜாவைப்போல் அநாகரீகமாக பேசியதில்லை.  அதோடு தனது கருத்துக்களில் இருந்து பின் வாங்கியதில்லை. தனது செயலுக்கு பிறர் மீது பழிபோட்டதில்லை. ஆகவே அவரது பெயரையே உச்சரிக்க எச்.ராஜாவுக்கு தகுதி இல்லை” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், “தான் பதிவிட்டது தவறு என்று ஒப்புக்கொள்வதுதான் சராசரி மனிதரின் நேர்மையான செயலாக இருக்கும். தனது சுயநலத்துக்காக முத்துராமலிங்கத்தேவர் பெயரை பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது முத்துராமலிங்கத்தேவரை அவமதிக்கும் செயல். ஆகவே இதற்காக ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் பதிவிட்டுவருகிறார்கள்.