பெங்களூரு
சோனியா காந்தியின் உடல் நிலை சரியாக இல்லாததால் விரைவில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்க வேண்டும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது தலைமைப் பதவியைப் பெருந்தன்மையுடன் ராஜினாமா செய்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அவரது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் ராகுல் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.
சித்தராமையா தனது பதிலில், “கர்நாடகாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. மேலும் கர்நாடகாவில் மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. எனவே கர்நாடகாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.. மாநில அரசு அவ்வாறு சொன்னால் அது செயற்கை பற்றாக்குறையாக இருக்கலாம்.
நான் ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.. இதற்கு காரணம் சோனியா காந்தி தனது கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை என்பது கிடையாது. அவருடைய உடல்நிலை சரியாக இல்லாததால் ராகுல் காந்தி தலைவராகி கட்சியை வழி நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.