4அதிருப்தி காங்.எம்எல்ஏக்கள் பதவி காலி? கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சபாநாயகரிடம் மனு

Must read

பெங்களூரு:

பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவை மதிக்காத 4அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கர்நாடக காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கர்நாடக சட்டமன்ற சபாநாயகரை சந்தித்து, 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த  6ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  அதையொட்டி, கூட்டப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வந்தனர்.

இதை காரணமாக கூறிய பாஜக, ஜேடிஎஸ் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும் பான்மை இழந்து விட்டதாக கூறி   சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு சபையை முடக்கினர்.

இதையடுத்து, அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்ட சபைக்கு வர வேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவிட்ட நிலையிலும் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை.

கோகாக் தொகுதியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோலி, அதானி தொகுதியை சேர்ந்த மகேஷ் குமுதல்லி, சின்கோலி தொகுதியை சேர்ந்த உமேஷ் ஜாதவ், பெல்லாரி தொகுதியை சேர்ந்த நாகேந்திரா ஆகிய 4 எம்எல்ஏக்களும் பாஜகவின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் சய்து வருகின்றனர்.

இதையடுத்து அவர்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைமை தீர்மானித்தது. அதைத்தொடர்ந்து,  அவர்கள் 4 பேர் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம்  மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

More articles

Latest article