புதுடெல்லி:

35 ஆயிரம் தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றவும், தொழிலாளர்களின் சலுகைகளை குறைத்து 5 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தவும், பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


ஜீயோ தொலைபேசி சேவை சுனாமி போல் வந்து, தனியார் தொலைத் தொடர்பு சேவைகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது. அதேசமயம், மத்திய அரசின் பிஎஸ்என்எல் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால். 35 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப்படவேண்டும் என இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
2018-ம் ஆண்டு கணக்கின்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1,74,000 தொழிலாளர்கள் உள்ளனர்.

அதேசமயம், தனியார் தொலைதொடர்பு சேவையில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற நிறுவனங்களைவிட பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5 மடங்கு அதிகமாக தொழிலாளர்கள் உள்ளனர்.

பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்த அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அறிக்கையில், குறைந்தது 35 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்தால், ரூ. 13 ஆயிரம் கோடி வரை மிச்சமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கை வரும் முன்பே பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அனுபம் ஸ்ரீவத்சவா கூறியதாவது:

தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பயணப்படி, மருத்துவ சலுகை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மின்சாரப் பயன்பாடு, நிர்வாகச் செலவு, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தம் ஆகியவற்றின் மூலம் இழப்பை ஓரளவு சரிகட்டி வருகின்றோம்.

தானாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து தொழிலாளர்களை விரைவில் வெளியேறச் சொல்வதே இதன் அர்த்தம்.

செலவுகளை குறைத்தாலே ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி மிச்சப்படுத்த முடியும். தொழிலாளர்களின் சலுகைகளை நிறுத்துவதன் மூலம் 25% தொகையை மிச்சப்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் 1லட்சத்து 75 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் கோடி செலவிட்டு வருகிறது.

கடந்த ஜுலை மாதம் முதல் அக்டோபர் வரை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ. 1,925.33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயிலும் 15% இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.