சென்னை: 2013ம் டெட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள்  மீண்டும் எழுதியாக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் கூறியதாக தகவல்கள் பரவி வருகிறது. இது ஆசிரியர்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப் படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.   ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, இந்திய அரசின் நடுவண் பள்ளிகள் வாரியம் இத்தேர்வுகளை நடத்துகிறது.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.

இந்த டெட் தேர்வுகளை எழுதியவர்களைத்தான் மாநில அரசு, அரசு அல்லது தனியார் பள்ளிகளில் பணிக்கு சேர்க்க முடியும்.  கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த நடைமுறை,  ஆசிரியர் பணியில் சேருபவர்கள் டெட் (டி.இ.டி) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயம்  எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி கடந்த 2013ம் ஆண்டு  டெட் தேர்வு எழுதியவர்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழல்  எழுந்துள்ளது. ஆனால், தமிழகத்தில்,  கடந்த 2013ல் டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பல ஆசிரியர்களுக்கு இன்னும் அரசுப் பணிகள் வழங்கப்பட வில்லை.

இதனால், அவர்கள், டெட் தேர்வில் தாங்கள் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகஅரசும் இதுவரை, டெட் தேர்வு விஷயத்தில்  நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறி வந்தது.  இந்த நிலையில், 2013ம் ஆண்டுக்கு முன் டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.