சென்னை,
கோவை இந்திய அரசு அச்சகத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கோவையில் உள்ள இந்திய அரசு அச்சகத்தை மூட மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான தொடக்கக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மத்திய அரசின் அச்சுத்துறை அடையாளமாக திகழ்ந்து வரும் இந்த அச்சகத்தை மூடும் மத்திய அரசின் முடிவு மிகவும் தவறானது; வருத்தமளிக்கிறது.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் இந்திய அரசு அச்சகத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. பெருந்தலைவர் காமராசரின் முயற்சியால் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 1964&ஆம் ஆண்டு இந்த அச்சகம் தொடங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்த இந்த அச்சகம் பின்னர் நவீனமயமாக்கப்பட்டதைத் தொடந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. இந்த அச்சகம் உட்பட நாடு முழுவதுமுள்ள 17 அச்சகங்களை இணைத்து மொத்தம் 5 அச்சகங்களாக மட்டும் நடத்த மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 20&ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கோவை, கேரள மாநிலம் கொரட்டி, கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய 3 அச்சகங்களும் நாசிக் அச்சகத்துடன் இணைக்கப்படவுள்ளன. இந்த இணைப்புக்கு பிறகு இந்தியாவில் தில்லி, நாசிக், கொல்கத்தா ஆகிய 3 நகரங்களில் மட்டும் தான் இந்திய அரசு அச்சகங்கள் இருக்கும்.
இந்த இணைப்புத் திட்டம் பாதிப்புகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துமே தவிர அச்சகத்துறை மேம்பாட்டுக்கு எந்த வகையிலும் பங்களிக்காது. 5 தென் மாநிலங்கள் உள்ளிட்ட மொத்தம் 10 மாநிலங்கள் தங்களின் அச்சுத் தேவைக்காக நாசிக் அச்சகத்தையே சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இதனால் நாசிக் அச்சகத்தின் பணிச்சுமை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு ஏதேனும் ஆவணங்களை அச்சடித்து அனுப்ப வேண்டுமென்றால் குறைந்தது 1500 கி.மீ. பயணிக்க வேண்டும். இது நேரத்தையும், பொருளாதாரத்தையும் வீணடிக்கும் செயலாகும்.
உற்பத்தி மையங்கள் பரவலாக்கப்படுவது தான் பொருளாதாரத்திற்கு நல்லது என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பரவலாக உள்ள அச்சகங்களை ஓரிடத்தில் ஒருங்கிணைப்பது எவ்வகையில் பயனளிப்பதாக இருக்கும் என்பது தெரியவில்லை. கோவையில் உள்ள அச்சகம் இலாபத்தில் செயல்பட்டு வருகிறது. அஞ்சல்துறை, கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களின் அச்சுத் தேவையை இது தான் நிறைவேற்றி வருகிறது. இந்த அச்சகத்திற்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கான அச்சு ஆணைகள் வந்து குவிந்துள்ளன. இதனால் எதிர்காலத்திலும் இந்த அச்சகம் இலாபத்தில் தான் இயங்கும் என்பது உறுதியாகிறது. மொத்தம் 132.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த அச்சகத்தை எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் விரிவாக்கம் செய்ய முடியும். இவ்வளவுக்குப் பிறகும் இதை மூட நினைப்பது கண்ணைக் கட்டிக்கொண்டு ஆற்றில் குதிப்பதற்கு சமமாகவே அமையும்.
இந்திய அரசு அச்சகங்களை இணைப்பதால் காலியாகும் நிலத்தை விற்று அதில் கிடைக்கும் நிதியை கொண்டு அச்சக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதனால் அரசுக்கு செலவோ, பணியாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய தேவையோ இருக்காது என்று அரசு கூறியிருக்கிறது. அது உண்மை தான். ஆனால், கோவை அச்சகத்தில் பணியாற்றுவோரில் பெரும்பாலோர் 50 வயதைக் கடந்தவர்கள். அவர்கள் தங்களின் குடும்பத்தை இங்கு விட்டு விட்டு நாசிக் சென்று பணியாற்றுவதோ, குடும்பத்துடன் நாசிக் செல்வதோ சாத்தியமற்றதாகும். அதுமட்டுமின்றி, இந்திய அரசு அச்சகத்தை நம்பி கோவையில் பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன. அவை பாதிக்கப்படுவதுடன், அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படும். இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய அரசு அச்சகங்களை இணைப்பதால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம். ஆனால், இதுபற்றி தமிழக அரசு இன்னும் வாயைத் திறக்காதது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
இவற்றுக்கெல்லாம் மேலாக இந்திய அரசு அச்சகங்கள் தேசப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அச்சிடுபவை ஆகும். அவை பரவலாக அமைந்திருப்பது தான் பாதுகாப்பானதாகும். தில்லி, கொல்கத்தா, நாசிக் ஆகிய 3 நகரங்களும் முக்கோண வடிவில் நெருக்கமாக அமைந்துள்ளன. இது தேசபாதுகாப்புக்கு உகந்ததல்ல. எனவே, கோவை இந்திய அரசு அச்சகத்தை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கொரட்டி, மைசூரு ஆகிய இடங்களிலுள்ள அச்சகங்களை கோவையிலுள்ள இந்திய அரசு அச்சகத்துடன் இணைக்க வேண்டும். இதற்காக மாநில அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.