சென்னை: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என இன்று மாலை காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 11 புதிய  மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி  இன்று மாலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி,  உரையாற்றினார்.   தமிழகத்தின்  அரியலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகை மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்  புதிய மருத்துவக் கல்லூரிகள் இன்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டடத்தையும்  காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்து, தமிழுக்கு புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் காணொளி காட்சி வழியாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் கலந்துக்கொள்ளும் முதல் அரசு விழா என்பதால் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின்  அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது கலைஞரின் கனவு. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம் என 2006 தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த கனவு இன்று நினைவாகியுள்ளது.

நாட்டிற்கே மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும்,  மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பை கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்க செய்வதே தமிழகத்தின் கொள்கை. தமிழக மருத்துவ துறையின் வெற்றியும் இந்த கொள்கையின் விளைவே. இந்த அடிப்படை கொள்கை பாதிக்கப்பட கூடாது என்பதால்தான் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். எனவே, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் தனது நீட் தொடர்பான கோரிக்கையை ஆங்கிலத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார்.