சென்னை,
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியின் உடலை சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறி உள்ளனர்.
சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி ஆகியோர் பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர்.
அங்கு இன்று அதிகாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, வீட்டினுள் இருந்த கொள்ளையர்கள் போலீசார்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இதில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவர் ராஜ்ஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழக போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ராம்புரா காவல் நிலையத்தில் சென்னை போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் இறந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் உடல்ஜோ த்பூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், அவரது உடலை விமானம் மூலம் சென்னை கொண்டுவர காவல்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் காரணமாக இன்று பிற்பகல் அல்லது இரவு பெரிய பாண்டியின் உடல் சென்னை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.